தேசிய நெடுஞ்சாலையில் அவசரகால விமான ஓடுதளம்
20 பங்குனி 2024 புதன் 00:49 | பார்வைகள் : 2675
ஆந்திராவில், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால தரையிறங்கும் வசதியுடைய விமான ஓடுதளம், நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், அவசர காலத்தில் தரையிறங்கும் வசதியுடைய விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நம் விமானப் படையினரிடம் இருந்து குறிப்புகளை பெற்று, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இந்த ஓடுதளம் அமைக்கும் பணியை செய்து வருகிறது.
அந்த வகையில், ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில், அடங்கி என்ற இடத்தின் அருகே உள்ள என்.எச்., -- 16 தேசிய நெடுஞ்சாலையில், அவசரகால தரையிறங்கும் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 4.1 கி.மீ., நீளமும், 108 அடி அகலமும் உடைய இந்த ஓடுதளம், பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் போன்ற பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஓடுதளத்தில், நம் விமானப் படையின் போர் மற்றும் போக்குவரத்து விமானங்களை தரையிறக்கப்பட்டன.
இந்த பணியில், விமானப்படையுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில போலீஸ், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட்டன.