போதை கடத்தலில் தம்பி தான் மெயின் ரோல் :ஜாபர் சாதிக் அதிர்ச்சி வாக்குமூலம்
20 பங்குனி 2024 புதன் 00:52 | பார்வைகள் : 3529
வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது' என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டார். பின், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்த அதிகாரிகள் மீண்டும் டில்லியில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
வெளிநாட்டு தொடர்புகள்
ஜாபர் சாதிக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டார். இதையடுத்து, ஜாபர் சாதிக், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்:சென்னை பெருங்குடியில், நானும் என் நண்பரான சதானந்தமும் நடத்தி வந்த, போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பியது தொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை உணவு பொருட்கள் அல்ல; போதை பொருள் கடத்தியதற்கான ரசீதுகள். எங்கள் கூட்டாளிகள், திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த இவர்கள் தான், எங்கள் தொழிலை விரிவுபடுத்தியவர்கள்.வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதில், என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் மூளையாக செயல்பட்டு வந்தார்.மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என, வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும், முகமது சலீமே கவனித்து வந்தார்.
வி.சி., நிர்வாகியாக இருந்த அவருக்கு, தமிழகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் மிகவும் முக்கியமான நபர்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது.மற்றொரு தம்பி மைதீன், சினிமாவில் நடித்து வருகிறார்.
அவர் வாயிலாக, கோலிவுட்டில் போதை பொருள் 'சப்ளை' செய்துள்ளோம். எங்களின் வாடிக்கையாளர்களாக சில நடிகர், நடிகையர், கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பேரீச்சம் பழத்தில் வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தோம். இதுபற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பேரீச்சம் பழம் இறக்குமதி தொழிலும் செய்து வந்தோம்.
இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், 'ஐடியா' கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
முகமது சலீம் எங்கே?
ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.