நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
20 பங்குனி 2024 புதன் 09:56 | பார்வைகள் : 2920
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்குகிறது. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்ய தீவிரமாகி வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்து விட்டது; பா.ஜ., கூட்டணியில் இதுவரை 7 கட்சிகள் இணைந்துள்ளன. ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.
தேமுதிக
அதேபோல், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, தேமுதிக.,வுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலுார், திருச்சி, மத்திய சென்னை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகரில் விஜயகாந்த் மகன்! லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு பெற்றார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட விருப்ப மனு வாங்கினார்.
16 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்டார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல்
சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
சென்னை தெற்கு - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எஸ்.விஜயன்
கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
விழுப்புரம் - பாக்யராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - அசோக்குமார்
சிதம்பரம் - சந்திரஹாசன்
நாகப்பட்டினம் - சுர்ஜித் சங்கர்
கரூர் - தங்கவேல்
மதுரை - டாக்டர் சரவணன்
தேனி - நாராயணசாமி
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
ஆரணி - கஜேந்திரன்