அமைச்சர்களுடன் எலிசேமாளிகையில் ஜனாதிபதி அவசர சந்திப்பு!!
21 பங்குனி 2024 வியாழன் 06:09 | பார்வைகள் : 5294
நேற்று புதன்கிழமை மாலை ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. பல்வேறு அமைச்சர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவைக் கொண்டே கணிக்கப்படுகிறது. அதனை பிரெஞ்சில் PIB என சொல்லப்படுகிறது. இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து பணவீக்கத்துக்குள் சிக்கிய பிரான்ஸ், தனது PIB -இனை கணிசமாக இழந்திருந்தது.
அரசு தற்போது தீவிரமான பற்றாக்குறைக்குள் சிக்கியுள்ளது. 4.9% இல் இருந்த PIB (ஆங்கிலத்தில் GDP) தற்போது 5.5% சதவீதமாக உயர்ந்துள்ளது. 5.6% சதவீதமாக உயரும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அறிவித்த 'இவ்வருடத்துக்குள் 4.4% சதவீதமாக குறைப்போம்!' எனும் வாக்குறுதி கைமீறிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை அடுத்தே இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
பொருளாதார அமைச்சர் Bruno Le Maire உள்ளிட்ட சில அமைச்சர்களுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று கலந்துரையாடினார். அதில் அரசு 'செலவுகளை கட்டுப்படுத்துவது' தொடர்பில் உரையாடினார்.
அதையடுத்து வரும் வாரத்தில் சில 'மாற்றங்கள்' அல்லது அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.