தயாநிதியை எதிர்த்து போட்டி: பிரேமலதாவுக்கு அறிவுரை
22 பங்குனி 2024 வெள்ளி 02:32 | பார்வைகள் : 2618
மத்திய சென்னையில் தயாநிதியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என, பிரேமலதாவிற்கு, அ.தி.மு.க., நிர்வாகிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.,விற்கு, மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நடுத்தர மற்றும் குடிசைப்பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இந்த தொகுதி உள்ளது. ஆங்காங்கே உயர்தட்டு மக்களும் வசிக்கின்றனர். தி.மு.க., பல முறை வெற்றி பெற்றும், இத்தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இத்தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக தயாநிதி மீண்டும் களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க., சார்பில் விருகம்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதியை களமிறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், விஜயகாந்த் மறைவிற்கு பின் போட்டியிடுவதால், பிரேமலதாவிற்கு மக்கள் மத்தியில் அனுதாபம் கிடைக்கும். பா.ஜ., சார்பில், வினோஜ் செல்வம் போட்டியிடுவதால் ஓட்டுக்கள் பிரியும். அதனால், பிரேமலதா எளிதாக வென்றுவிடலாம் என, அவரை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கருத்துக்கூறி உள்ளனர்.
பிரேமலதா போட்டியிடுவதால் கட்சிக்கும் எழுச்சி கிடைக்கும் என, தே.மு.தி.க., நிர்வாகிகளும் கூறியுள்ளனர்.