கதிர்ஆனந்தை கைது செய்ய போறாங்க: துரைமுருகன்
22 பங்குனி 2024 வெள்ளி 02:36 | பார்வைகள் : 2255
தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்தை கைது செய்ய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வந்துள்ளது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில், தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பேசியதாவது: குடியாத்தத்தில் விதிகளை மீறி ஏரியில், நீதிமன்றம் கட்டிக்கொடுத்தேன். அதனால் இன்று வரை, எனக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து கொண்டே இருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால், காட்பாடி தொகுதியில், 12 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன். தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவார்.
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, அது பா.ஜ., தான் என கொண்டு வர வேண்டும் என, வட கொரியாவில் நடப்பதை போல், ஒரு ஆட்சியை இங்கு நடத்த நினைக்கின்றனர். நீங்கள் போடுகிற ஓட்டு, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போடப்படும் ஓட்டு.
தவறினால், மீண்டும் ஒரு மிசா வரும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க.,வையும், அதன் கூட்டணியையும் உடைத்தெறிவேன் என, ஒரு மாபெரும் தலைவர், இதுபோன்ற வார்த்தைகளை கூறலாமா?
வாரிசு அரசியல் நடத்துவதாக கூறுகின்றனர். வாரிசு அரசியல் என்றால் என்ன, ஆம்பளையா இருக்கிறவன், கல்யாணம் பண்ணிக்கிறான். அதிலும், ஆண்மையாக இருக்கிறவன் பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறான். இதற்கு நாங்கள் என்ன பண்ணுவது? பின், பிள்ளை வளர்கிறது. எங்களை போன்று கட்சி வேலை செய்கிறது; கட்சிக்காரர்கள் தேர்தலில் நிற்க வைக்க சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின், அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ''வேட்பாளர் கதிர்ஆனந்தை எப்படியாவது கைது செய்து விட, ஒரு செல்வாக்கு மிக்க வேட்பாளர், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுகுறித்து, மேலிடத்திலிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை,'' என்றார்.