கணவன்-மனைவிக்கான `ரொமான்ஸ்' ரகசியங்கள்....!
23 பங்குனி 2024 சனி 12:19 | பார்வைகள் : 1964
கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...?
முன்பின் தெரியாத யார் யாருக்கோ அவ்வப்போது நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் பலர், வீட்டுக்குள் அதை கடைப்பிடிப்பதில்லை. நம்மவர்தானே... வழக்கமாக செய்யும் வேலைதானே... என்று அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிடுகிறார்கள். மாறாக, மனைவி விசேஷமாக ஒன்றை சமைக்கும்போது, அவருக்காக கணவர் வேலையில் உதவி செய்யும்போது யோசிக்காமல் பரஸ்பரம் பாராட்டு தெரிவிக்கலாம். 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலின் மீது குற்றச்சாட்டை போட்டு விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் இந்த ஓட்டம் என்று எவரும் யோசிப்பதில்லை. வாழ்க்கை முழுவதும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும் துணைக்கு நேரம் ஒதுக்கி, மனம் திறந்து பேசுவதும், அவர் கூறுவதை கேட்பதும் முக்கியம். முடிந்தால் இருவரும் வெளியிலும் சென்று வரலாம்.
திடீர் இன்ப அதிர்ச்சி எவருக்கும் ஒரு 'திரில்'லை ஏற்படுத்தும். அது பரிசுப் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதிர்பாராத நேரத்தில் ஒரு அன்பான பார்வை, நெகிழ்ச்சியான சொல் போன்றவை உங்கள் வாழ்க்கைத்துணையின் மனமார்ந்த வரவேற்பை பெறும். உறவினர்கள் சூழ்ந்திருக்கையில், "நான் அவளிடம் கூட சொன்னதில்லை... பசங்களை அவளைப் போல யாரும் பொறுப்பா பார்த்துக்க முடியாது' என்ற வார்த்தைகூட மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்.
வெளிப்படையான பேச்சும், நேர்மையான தகவல்தொடர்பும் இல்லற வாழ்வின் வலுவான அஸ்திவாரமாகத் திகழும். கணவன்-மனைவி தங்களுக்கு இடையிலான பேச்சை மேம்போக்காக வைத்துக்கொள்ளாமல், தமது உணர்வுகள், கனவுகள்... ஏன், பயங்களை கூட பகிர்ந்து கொள்ளலாம். இது உணர்வு ரீதியாக இருவரும் நெருக்கமாக உதவும்.
கணவன், மனைவியிடமும், மனைவி, கணவனிடமும் தங்கள் எண்ணங்களை, தேவைகளை முதலில் கூற முற்படுவார்கள். அப்போது, 'சும்மா தொண தொணக்காதே..' என்றோ, ஆரம்பிச்சுட்டீங்களா?' என்று முட்டுக்கட்டை போடாமல், பொறுமையாக, காது கொடுத்து கேளுங்கள். துணையின் பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதுகூட இல்லை. கவனமாக கேட்டு, ஆறுதலாக கூறும் இரண்டு வார்த்தைகளே அவருக்கு மிகுந்த நிம்மதியை தரும்.
தம்பதியர் இடையில் நெருக்கத்தை வளர்ப்பதில் ஸ்பரிசத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கைகளை ஆதரவோடு பற்றுதல், அரவணைத்தலுடன், திடீர் அன்பு முத்தமும் அதிசயங்களை நிகழ்த்தும்.