உறவுகளுக்குள் சமரசம் ஏன் முக்கியமானது..?
24 பங்குனி 2024 ஞாயிறு 10:13 | பார்வைகள் : 2133
உங்களது வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் உறவு, நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு உங்களிடம் உறவில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியம்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு உங்களுக்கு வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து சமரசமாக செல்வது அவர்களை பற்றி மேலும் நீங்கள் புரிந்து கொள்ளவும், அவர்கள் மீதான உங்கள் அக்கறையை வெளிப்படுத்தவும் உதவுகிறது. உறவுகளுக்குள் உங்கள் சொந்த விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், எதிர் நபரை புரிந்து கொண்டு சமரசமாக போவதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட அந்த உறவில் நம்பிக்கை மற்றும் பாசம் நிறைந்த ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். இதை தவிர பொதுவாக உறவுகளில் சமரசம் ஏன் முக்கியமான ஒன்று என்பதற்கான சில காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்…
கருத்துக்களுக்கு மதிப்பு: ஒரு உறவில் இருக்கும் 2 நபர்களுமே எப்போதும் சமரசம் செய்து கொள்ள தயாராக இருந்தால், அது ஒருவருக்கொருவரின் கவலைகள் மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதை குறிக்கிறது. சமரச உணர்வு என்பது குறிப்பாக தம்பதிகளிடையே பரஸ்பரம் மரியாதை உணர்வை வளர்க்கிறது. உறவில் சிறந்த புரிதலையும் நம்பகத்தன்மையையும் வளர்ப்பதில் சமரசம் முக்கிய இடம் வகிக்கிறது.
மோதலை குறைக்கும்: நண்பர்களாகட்டும், உறவினர்களாகட்டும் அல்லது தம்பதிகளாகட்டும் உறவில் இருக்கும் இருவரில் ஒருவர் கூட சமரசம் செய்ய விரும்பவில்லை அல்லது அதற்கு தயாராக இல்லை என்றால் அது உறவில் தேவையற்ற ஈகோ மோதல்களையும், வீண் வாக்குவாதங்களையும் உருவாக்கும். வாதங்கள் நிகழ்ந்தால் கூட இறுதியில் ஒருமித்த கருத்தை அடைய சமரச உணர்வு உதவும்.
தோழமை உணர்வை வளர்க்கும்: உறவில் விட்டு கொடுத்து செல்லும் தன்மையை சமரச உணர்வு ஊக்குவிக்கிறது. உறவில் உள்ள இருவரில் ஒருவர் சமரசம் செய்யும் போது இயல்பாகவே ஒருவருக்கொருவரின் தேவைகள் மற்றும் ஆசைகளை மதிக்கும் பழக்கம் அதிகரிக்கும். குறிப்பாக இது காதல் ஜோடிகள் மற்றும் தம்பதியர் இடையே தோழமை உணர்வை வளர்த்து இருவருக்குள்ளும் பிணைப்பை அதிகரிக்கும்.
பரஸ்பரம் நம்பிக்கை வளரும்: உறவில் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதில் சமரசம் செய்து கொள்வது முக்கிய பங்காற்றுகிறது. இந்த உணர்வை கொண்டிருப்பது உறவு நீட்டிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வின் வெளிப்பாட்டை குறிக்கிறது. உறவுகளுக்குள் இரு நபர்களும் சமரசம் செய்ய தயாராக இருக்கும்போது, அது பரஸ்பரம் நம்பிக்கை உணர்வை வளர்க்கிறது.
உறவை நீடிக்க செய்கிறது: உறவுகளுக்குள் இருக்கும் பரஸ்பர ஆதரவு மற்றும் சமரச உணர்வு தம்பதியரின் கனவுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றி கொள்ளவும் உதவுகின்றன. ஒருவர் வெளிப்படுத்தும் சமரச உணர்வானது அவரின் தனிப்பட்ட விருப்பங்களை விட, பரஸ்பர தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதை குறிக்கிறது. ஒரு உறவு நீண்ட காலம் நீடிப்பது என்பது சமரசம் செய்து கொள்வதற்கான ஒரு தனிநபரின் திறன் மட்டும் தனிப்பட்ட தேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஒருவருக்கொருவர் பரஸ்பர தேவைகளை புரிந்து கொள்வதை பொறுத்தும் இருக்கிறது.