தி.மு.க., அ.தி.மு.க., ஒன்று சேரும்: அண்ணாமலை
24 பங்குனி 2024 ஞாயிறு 15:05 | பார்வைகள் : 3521
ஏப்.,10க்கு பிறகு தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கோவையில் ஒன்று சேரும்'' என கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: 2019 ல் அளித்த 295 வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். திமுகவை போல் சொன்ன விஷயத்தை திரும்ப பா.ஜ., சொல்லாது. மோடி செய்தது, பாஜ செய்தது மக்களுக்கு தெரியும்.
கம்யூனிஸ்ட் எம்.பி., வளர்ச்சி வேண்டாம் என பிடிவாதமாக உள்ளார். மற்றொரு வேட்பாளரின், கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே பாலம் கட்டும் கட்சியைச் சேர்ந்தவர். ஊழல் செய்வதற்காக மட்டுமே ஆட்சியில் இருந்த கட்சி வளர்ச்சி பற்றி பேசுகிறது. கோவையில் கொள்ளையடிப்பதற்காக, கமிஷன் பெறுவதற்காக வளர்ச்சி என்ற வீக்கத்தை காட்டி கொண்டுள்ளனர்.
மத்திய அரசுக்கும், கோவை மக்கள் இடையே ‛ ஹாட்லைன் ' ஆக இருப்பேன். மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து திட்டங்களை வேகமாக செயல்படுத்துவோம்.
ஒருவர் சொல்வதை இபிஎஸ் முழுமையாக கேட்க மாட்டார். அதற்கான தன்மையை இழந்து விட்டார். அவரிடம் ஆணவம் வந்துவிட்டது. பா.ஜ., சார்பில் யாரும் ஒப்பந்ததாரர்கள் இல்லை.அதிமுக ஆட்சியில் சம்பாதித்த பணம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் வேட்பாளர்களாக அதிமுக சார்பில் இறங்கி உள்ளனர்.
செங்கலை கையில் எடுத்து, செங்கலை பாருங்கள் என சொல்லும் அளவுக்கு தான் உதயநிதிக்கு அறிவு இருக்கிறது. அரசியலில் பக்குவப்படாதவர்கள், அறிவு இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு சமுதாய பணி செய்பவர்கள் யாரும் வராமல், தாத்தா, அப்பா இன்ஷியல் மட்டும் வைத்து கொண்டு அரசியலுக்கு வந்தால், செங்கலை தூக்கி வந்து, செங்கலை காட்டும் புத்தி மட்டும் இருக்கும்.
2026ம் ஆண்டின் முதல்பகுதியில் எய்ம்ஸ் வரும் என உறுதி அளித்துள்ளோம். கருணாநிதி குளித்தலை தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 33 மாதமாக செய்த சாதனையை சொல்லவில்லை. எதிர்மறை அரசியல் செய்கின்றனர். மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
அதிமுக, திமுக ஏப்.,10 ல் ஒன்று சேர்வார்கள். ஒன்று சேர்வதை கடைசி 10 நாளில் எதிர்பார்க்கிறேன். அன்றைக்கு பங்காளி கட்சிகள் சுயரூபத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இரண்டு கட்சிகளும், தேர்தலில் நிற்பது பண பலம், படைபலத்தை வைத்து அண்ணாமலையை தோற்கடிக்க. திமுக.,வுக்கு இங்கு என்ன வேலை. அதிமுக ஏன் சுற்றி சுற்றிவருகிறார்கள்.ஏப்.,10க்கு மேல் கடைசியில் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் விட்டுக்கொடுத்து ஒருவரை நிறுத்தி ஓட்டு டிரான்ஸ்பர் செய்ய உள்ளனர்.
கேரளாவில் இது நடந்துள்ளது. கோவையில் முதல்முறை பார்க்க போகிறோம்.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 சதவீத கமிஷன் பெற்றனர். கோவிட் காலத்தில் 10 ரூபாய் பினாயிலை 40 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். 100 ரூபாய் பினாயிலை 700 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். அதில் வந்த பணத்தை வைத்து பேசுகின்றனர். இவர்கள் என்ன மக்கள் தலைவர்கள், என்ன சமுதாய தலைவர்கள். கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளனர்.
10 வருடம் மந்திரியாக இருந்து கொள்ளையடித்து, ஊழல் பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து, தேர்தல் நேரத்தில் அள்ளி வீசினால், அது வளர்ச்சியா அது வீக்கம். ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.