முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: பிரேமலதா
25 பங்குனி 2024 திங்கள் 01:35 | பார்வைகள் : 2729
திருச்சியில், நேற்று, அ.தி.மு.க., -- தே.மு.தி.க.,புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடந்தது.
அதில், தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா லோக்சபா தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: மூன்று மனிதர்களாக பிறந்து தெய்வங்களாகி இருக்கும் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு ஆதரவு கேட்கிறேன்.
திருச்சி என்றாலே, அரசியல் திருப்புமுனை என்பது சிறப்பு அம்சமாக அமைந்திருக்கிறது. விஜயகாந்த் இல்லாமல், இந்த கூட்டத்துக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது. இனி வருங்காலம் வளமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மூன்று தலைவர்களுமே திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள், மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக வாழ்ந்து காட்டியவர்கள். மக்களால் ஈர்க்கப்பட்ட அவர்களின் மறைவும் டிசம்பர் மாதத்திலேயே ஒரே மாதிரி அமைந்தது கடவுளின் தீர்ப்பு.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் இல்லாமல் பழனிசாமி சந்திக்கும் முதல் பார்லிமென்ட் தேர்தல். அதே போல், விஜயகாந்த் மறைவுக்கு பின், நான் பொதுச் செயலராகி சந்திக்கும் முதல் பார்லிமென்ட் தேர்தல்.
அதனால், நாங்கள் இருவரும் மிகப்பெரியராசியான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளதால், வருங்காலத்தில் சாதித்துக் காட்டுவோம்.
தலைகுனிவு
மூன்று தலைவர்களின் ஆட்சியும், செயலும் மக்களால் போற்றக் கூடியதாக இருந்தது. அவர்கள் எந்தவிதமான தீமையான செயலையும் சொல்லித் தரவில்லை.
ஆனால், மாற்றுக் கட்சியினர் ரவுடியிஸத்தால் சட்டம் - ஒழுங்கை கெடுத்து, நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
கடந்த 2021ல் இந்த கூட்டணி அமைந்து இருந்தால், பழனிசாமியின் ஆட்சி தொடர்ந்திருக்கும். சற்று தாமதமாக, 2024ல் இந்த கூட்டணி அமைந்திருக்கிறது. கடந்த 2021ல், பழனிசாமி முதல்வராகி இருந்தால், அ.தி.மு.க., ஒரு சரித்திரத்தை உருவாக்கி இருக்கும்.
மீண்டும், அவர் முதல்வராகும் நாள் வெகு தொலைவில் இல்லை. 2011ல் அமைந்த இதே கூட்டணி, 2026ல் அமைந்து வெற்றியை பெறும்.
இதுவரை கூட்டணியில் இருக்கிறோம் என்று நாடகம் நடத்தியவர்கள், வேண்டியது கிடைத்தவுடன், 'துண்டை காணோம், துணியை காணோம்' என, கூடாரத்தை கிளப்பி, வேறு இடத்துக்கு சென்று விட்டனர்.
ஆனால், தே.மு.தி.க., சொன்ன வார்த்தையில் உறுதியாகவும், இறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
கொங்கு மண்டலத்தினர் மரியாதை மிக்கவர்கள் அன்பானவர்கள். நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் பழனிசாமி நிரூபித்துக் காட்டுகிறார். கண்ணியத்துக்கும் சிறந்த உதாரணமாகவும் இருக்கிறார்.
தே.மு.தி.க.,வினர் நியாயத்துக்கும், தர்மத்துக்கும் தான் துணை நிற்குமே ஒழிய, ரவுடியிஸத்துக்கும், கொலை, கொள்ளைக்கும் துணை நிற்க மாட்டோம்.
துளசி கூட வாசம் மாறும்; தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை. வரும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி இருக்கும்.
தி.மு.க., ஆட்சியில் மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது. தி.மு.க.,வினர் கஞ்சா கடத்தும் ரவுடிகளாக இருக்கின்றனர். தமிழகம் முழுதும் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன.
நல்லவர், யோக்கியமானவர் என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், கஞ்சா கடத்துபவர்களையும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பவர்களையும் சிறையில் அடைக்கத் தயாரா?