கனேடிய பிரதமரின் மணமுறிவு : அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ஆட்சி நிர்வாகத்தின் பொருட்டானதா?
11 ஆவணி 2023 வெள்ளி 06:42 | பார்வைகள் : 2788
கனேடிய பிரதமரும் அவரது மனைவியும் தாம் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தார்கள். இது பற்றிய செய்திக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கியிருந்தன. கனடாவிலும் வெளிநாடுகளிலும் இரு வகையான எதிர்வினைகள்.
வெளிநாடுகளில், 'ஐயோ அற்புதமான தம்பதியாச்சே, ஏன் இப்படி? என்ன நடந்தது?' என்ற தொனியை காணக்கூடியதாக இருந்தது.
கனேடிய மக்கள், 'இது இருவரதும் தனிப்பட்ட விஷயம். நாம் மூக்கை நுழைப்பானேன்?' என்றவாறு பேசிக்கொண்டார்கள்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ 2005இல் சோபியாவை மணந்தார். தமது 18 வருடகால திருமண வாழ்க்கையில் இருவருக்கும் மூன்று பிள்ளைகள். காதல் திருமணந்தான். தனது தம்பியின் சினேகிதியாக அறிமுகமான பெண், பின்னாட்களில் பொது நிகழ்வொன்றில் ட்ரூடோவின் வாழ்க்கையில் குறுக்கிட்டார்.
தமது காதலை 31 வயதில் வெளிப்படுத்திய தருணத்தில், 'இத்தனை வருடங்கள் உனக்காகவே காத்திருந்தேன்' என ட்ரூடோ சொன்னதாக சோபியா கூறுவார்.
கடந்த வாரம் பிரிதல் பற்றி அறிவித்தபோது, தாம் மனமொப்பியே பிரிகிறோம் என்று இருவரும் கூறினார்கள்.
15 வயதில் மகன், 14 வயதில் மகள், ஒன்பது வயதில் கடைக்குட்டி மகன் ஆகிய மூவரினதும் நலனுக்காக தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்குமாறு பிரிந்து செல்லும் தம்பதியினர் கேட்டனர்.
உலக நாடுகளின் மக்கள் ட்ரூடோ தம்பதியின் பிரிவு பற்றிய செய்திக்கு சற்று உணர்ச்சிவசப்பட்டார்கள் என்றால், அதற்கு காரணம் இருந்தது. இந்த மக்களின் கண்களுக்கு ட்ரூடோ ஈர்ப்பு மிக்கவராக திகழ்ந்தார். அந்த மக்கள் அவரை ஆளுமை மிக்க உலகத் தலைவராக பார்த்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால், கனேடிய பிரதமருக்கு ஒரு திரை நட்சத்திரத்தின் புகழும் அந்தஸ்தும் இருந்தது. அவர் குடும்பத்தின் மீது காட்டிய பாசத்தை மக்கள் ரசித்தனர்.
இந்த ஆர்வம் காரணமாக ட்ரூடோ, சோபியா ஆகியோருக்கு இடையில் மணமுறிவு ஏற்படுவதற்குரிய காரணம் என்னவென்று அறிவதில் ஆர்வம் காட்டினார்க்ள.
கனேடிய மக்களைப் பொறுத்தவரையில், பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக அக்கறைப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்களின் கலாசாரம் அப்படிப்பட்டது. பிரிவு, மணமுறிவு, சட்டப்படியான விவாகரத்து என்பதெல்லாம் அல்லோலகல்லோலப்பட வேண்டிய விஷயமல்ல. பலரது வாழ்க்கையில் நடப்பது தானே என்ற மனப்பாங்கு.
ஒரு பிரதமராக ட்ரூடோ ஆற்றும் காரியங்களில் பாதிப்பை ஏற்படுத்தாவிடின், இந்தப் பிரிவு பொருட்படுத்த தேவையில்லாத ஒன்றென்பது கனடாவின் பொதுக் கண்ணோட்டம்.
இந்தக் கண்ணோட்டம் நாட்டுக்கு நாடு மாறுபடலாம். ஒரு நாட்டில் சரியானதாகவும், இன்னொன்றில் தவறானதாகவும் பார்க்கப்படலாம்.
ஒரு நாட்டின் அரசியல், சமூக, கலாசார காரணிகள் அடிப்படையில், அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் தீர்மானிக்கப்படுகிறது. சில நாடுகளில் தமது அரசியல் தலைவர் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதில் அவரை தெரிவு செய்த மக்கள் இறுக்கம் காட்டுவார்கள்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், வெள்ளை மாளிகை முன்னாள் ஊழியர் மொனிக்கா லெவின்ஸ்கி காதல் விவகாரத்தை ஞாபகப்படுத்தலாம். இது அமெரிக்க அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விவகாரமாகும்.
இது மக்கள் மத்தியில் பில் கிளின்டனுக்கு இருந்த அபிமானத்தில் கறைபடியச் செய்ததுடன், அவரை அரசியல் குற்றப் பிரேரணை வரை இழுத்துச் சென்றது. பிரான்ஸ் போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிரச்சினை வேறு விதமாகவே அணுகப்படும்.
தமது மனைவியை ஏமாற்றி நடிகையுடன் காதல் தொடர்பு பேணிய செய்தி அம்பலமானபோது ஜனாதிபதி பிரான்சுவா ஹொல்லந்தேயை மக்கள் வெறுத்தார்கள்.
முன்னைய ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி விவகாரத்தில், பிரெஞ்சு மக்கள் அந்தளவிற்கு கடுமையாக இருக்கவில்லை. அவர் பாடகி கார்லா ப்ருணியுடன் தொடர்பில் இருந்த தகவல் அம்பலமானபோது, அவர் மீது மக்களுக்கு இருந்த ஆதரவு கணிசமாக வீழ்ந்ததை கருத்துக்கணிப்புகள் காட்டின.
எனினும், ப்ரூணியை சார்கோஸி திருமணம் செய்து, இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தபோது, அவர் மீதான ஆதரவு பழைய நிலைக்குத் திரும்பியது.
ஒரு தலைவரை மக்கள் எந்தளவிற்கு அங்கீகரிக்கிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முக்கியமானதொரு விடயமாக இருக்கிறது. ஒரு தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் மீது மக்கள் அக்கறை காட்ட வேண்டுமா? அது அவசியமானது தானா?
தனிப்பட்ட வாழ்க்கை எப்படியாவது இருந்து போகட்டும். அது அவரது ஆட்சி நிர்வாகத்தைப் பாதிக்காவிட்டால்இ அதைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் உண்டா?
சமகால உலகில் இவை மிகவும் முக்கியமான கேள்விகள். துரதிருஷ்டவசமாக இதற்கு ஆமென்றோஇ இல்லையென்றோ தீர்க்கமாக பதில் அளிக்க முடியாது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில்இ இராஜ்ஜியத் தலைவரான ஜனாதிபதியின் குடும்ப வாழ்க்கை சீரானதாக இருப்பது மிகவும் முக்கியமானது.
இங்கு ஜனாதிபதியின் மனைவி, அதாவது முதற்பெண்மணி, தனிப்பட்ட மனுஷி அல்ல. அவர் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பின் ஓரங்கம். ஜனாதிபதியின் குழுவில் முதற்பெண்மணிக்கு முக்கியமான வகிபாகம் உண்டு. வெள்ளை மாளிகையில் முதற்பெண்மணிக்கு தனியானதொரு அலுவலகம் இருக்கிறது.
சம்பிரதாயபூர்வ விழாக்களில் முதற்பெண்மணி கட்டாயமாக பங்குபற்றியே ஆக வேண்டும். பொதுப் பணிகளில் பங்களிப்பு செய்வது கட்டாயமானது.
அங்கு பராக் ஒபாமாவிற்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதேயளவு முக்கியத்துவம் மிஷெல் ஒபாமாவிற்கு இருந்தது.
பில் கிளின்டனின் மனைவியான ஹிலாரி கிளின்டனும் அப்படித்தான். வெள்ளை மாளிகையில் தீர்க்கமானதொரு சக்தியாக அவர் விளங்கினார்.
இது வேறு நாடுகளில் வித்தியாசப்படுகிறது. சில நாடுகளில் முதற்பெண்மணியின் பெயர் என்ன என்று கேட்டால், எவ்வளவு மெனக்கெட்டாலும் நினைவில் கூட வராது. சீனப் பிரதமர் லீ கியாங்கின் மனைவி யார்? ஜேர்மனியின் முன்னாள் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்க்கலின் கணவரது பெயரை அறிந்திருக்கிறீர்களா?
இத்தாலியில் முதற்பெண்மணி என்ற சொற்றொடருக்கு சரியான மொழிபெயர்ப்பே கிடையாதாம். அங்கு ஆங்கிலப் பதம் தான் பயன்படுத்தப்படுகிறதாம். அங்கு பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனி ஸ்த்ரீலோலனாகவே பார்க்கப்படுவது உண்டு. இவர் சம்பந்தப்பட்ட ஏராளமான சர்ச்சைகள்.
ஒரு கட்டத்தில் பெர்லுஸ்கோனியை அவரது மனைவி விவகாரத்து செய்தார். ஆனாலும் கூட அவருக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணை தாக்கல் செய்யப்படவும் இல்லை. அவர் பதவி விலகவும் இ;ல்லை.
இது இத்தாலியின் ஜனநாயக ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் அரச தலைவர்களின் ஒழுக்கம் பற்றி அந்நாட்டின் சமூகத்திலுள்ள பொதுப்புத்தி. இந்தப் பொதுப்புத்தியைத் தீர்மானிப்பதில் கலாசார காரணிகளும் தாக்கம் செலுத்த முடியும்.
ஒரு சமூகம் மத விழுமியங்களை மதிப்பதாகவும், அந்த மத விழுமியங்களில் குடும்பம் என்ற அலகிற்கு முக்கியத்துவம் உள்ளதாகவும் வைத்து கொள்வோம். அத்தகைய சமூகத்தில் அரச தலைவர் ஒழுக்கம் மிக்கவராகவும், சிறப்பான குடும்ப உறவைக் கொண்டவராகவும் இருப்பது அவசியமாகும்.
இந்தத் தகுதிகள் இல்லாத பட்சத்தில், இத்தகைய தலைவர் தாம் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்றவராகக் கருதப்படுவார்.
இது அரசியலும், மதமும் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பிலோ, கலாசார ரீதியாகவோ பின்னிப் பிணைந்த தேசங்களில் காணக்கூடிய இயல்பு.
கனடாவைப் பொறுத்தவரையில், மதம் உள்ளிட்ட காரணிகளை விடவும் ஆட்சி நிர்வாகத் திறன் என்பதே ஜனநாயகத்தைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது.
ட்ரூடோ மனைவியிடம் இருந்து பிரிந்ததைப் பற்றியோ, பிரிவிற்கான காரணங்கள் பற்றியோ அந்நாட்டு மக்கள் அதிக கரிசனை காட்டாமல் இருக்கிறார்கள். கனடாவின் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், பதவியில் இருக்கையில் மனைவியைப் பிரிந்த ஒரே ஒரு பிரதமர் தான் இருக்கிறார். அவர் வேறு யாருமல்லர். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவ்வின் தந்தை. 1977இல் மனைவியை விட்டுப் பிரிந்த பியரே எலியெட் ட்ரூடோ.
இந்தப் பிரிவுக்குப் பின்னரும் பியரே ட்ரூடோ பிரதமராக இருந்தார். இன்னொரு தடவையும் பிரதமராக தெரிவானார்.
அவர் மனைவியை விவகாரத்து செய்ததால், கனேடிய மக்கள் அவரை நிராகரிக்கவும் இல்லை. மனைவியுடன் வாழத் தெரியாத குடும்பத்தில் இருந்து வந்தார் என ஜஸ்டின் ட்ரூடோவை புறக்கணிக்கவும் இல்லை.
கனேடிய மக்களைப் பொறுத்தவரையில், மதமோ, வேறெந்த காரணங்களோ முக்கியமில்லை. ஜனநாயக ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் அவரது நோக்கமும், ஆற்றலுமே முக்கியம்.
எதற்காக ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு அரசியல் பதவியைப் பெற விரும்புகிறாரோ, அந்தப் பதவிக்குரிய எதிர்பார்ப்புகளை அடியொட்டிச் சென்று அவற்றை சரியாக நிறைவேற்றினால் போதும். மற்றதெல்லாம் பொருட்டல்ல என்பது கனேடிய மக்கள் கற்றுத்தரும் ஜனநாயகப் பாடம், ஜஸ்டின் ட்ரூடோவின் கதை.
நன்றி வீரகேசரி