வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்படும் இலங்கையர்கள்
25 பங்குனி 2024 திங்கள் 17:08 | பார்வைகள் : 2708
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கொழும்பு 7, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் அடையாளப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அண்மித்த பகுதியில் சிலரை அழைத்து அவர்களிடமிருந்து இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் 9 பேரிடமிருந்து 7 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் அவருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.