26 பங்குனி 2024 செவ்வாய் 14:23 | பார்வைகள் : 2532
நாங்கள் குடும்ப கட்சி தான். தமிழகத்தில் மக்களுக்கு உழைக்கின்ற கட்சி தி.மு.க., என முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் .பின்னர் எட்டையபுரம் அடுத்த சிந்தலக்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு கனிமொழி, ராமநாதபுரம் ஐ.யூ.எம்.எல். வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து பேசியது,
எங்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளை வைக்க முடியாதவர்கள் குடும்ப அரசியல் என்கின்றனர். ஆமாம் நாங்கள் குடும்ப கட்சிதான் தமிழகத்தில் ஒவ்வொரு மக்களுக்காகவும் உழைக்கின்ற கட்சி தி.மு.க., நாங்கள் மக்களுக்கு உழைப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்கள் பிரதமர் மோடியை போல ஊர்சுற்ற அல்ல.
மரண ஓலம்
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த அ.தி.மு.க., அரசின் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தான். தூப்பாக்கிச்சூடு சத்தமும், மக்களின் மரண ஓலமும் தூத்துக்குடியில் ஒலித்துக்கொண்டிருந்த காட்சி என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. அப்போதைய முதல்வரான பழனிசாமிக்கு தெரிந்து தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது என விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.
ஸ்டர்லைட் ஆலையை திறக்க முடியாதடி செய்தது, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கியது தி.மு.க., தான்.
கனிமொழி வெற்றி உறுதி
ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனியை கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தூத்துக்குடி வேட்பாளர் என் தங்கை கனிமொழி ‛‛என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கொள்கையுடன்'' நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.
தூத்துக்குடியில் மக்களோடு மக்களாக வாழ்பவர் கனிமொழி. தூத்துக்குடிக்காகவும், மக்களுக்காகவும் லோக்சபாவில் கர்ஜித்தவர் கனிமொழி. இத்தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்று பார்லிமென்ட்டிற்கு செல்வதை பா.ஜ., பார்க்கத்தான் போகிறது அ.தி.மு.க.,வின் துரோகங்களையும், தி.மு.க.வின் செயல்பாடுகளை மக்கள் களத்தில் எடைபோடுவார்கள்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை யார் சொன்னாலும் அதனை ஏற்று மக்கள் பயனடையும் வகையில் பணியாற்றுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.