உக்ரைன் நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் இங்கிலாந்து
25 மாசி 2024 ஞாயிறு 10:25 | பார்வைகள் : 3215
உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய போர் 2 வருடம் நிறைவடைந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போர் நிறுத்தம் மற்றும் படைகளை உக்ரைனிலிருந்து திரும்ப பெறுவது குறித்து பல உலக நாடுகள் கடந்த பல மாதங்களாக முன் வைத்த கோரிக்கைகளை ரஷ்ய அதிபர் புடின் புறக்கணித்து வந்தார்.
இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பல பொருளாதார மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை இங்கிலாந்து கொண்டு வந்தது.
பல்வேறு காரணங்களால் அமெரிக்காவிலிருந்து உக்ரைனுக்கு கிடைத்து வந்த பொருளாதார மற்றும் இராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமது நாடு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ரிஷி சுனக், உக்ரைனுக்கு சுமார் ரூ. 2600 கோடி (250 மில்லியன் பவுண்ட்) மதிப்பிற்கு இராணுவ தளபாட உதவிக்காக நிதி ஒதுக்கியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்ததாவது,
போர் தொடங்கி 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்க்கும் நிலைப்பாட்டில் இங்கிலாந்து மேலும் உறுதியாக உள்ளது.
என்றுமே சர்வாதிகாரம் வெற்றி பெறுவதில்லை. நாங்கள் இன்றும் உக்ரைன் பக்கமே நிற்கிறோம். தொடர்ந்தும் நிற்போம்.
இதற்காக எத்தனை நாட்கள், என்னென்ன செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்வோம். இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.