26 மாசி 2024 திங்கள் 03:39 | பார்வைகள் : 2604
இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வெப்பநிலை தொடரும் என எச்சரிக்கை
இலங்கை தீவில் தற்போது வெப்பநிலையானது 86 பாகை செல்சியஸாக நிலவி வருகிறது.
இவ்வாறு நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதிக வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக சிறு குழந்தைகள் , பாடசாலை மாணவர்கள் , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் போன்றோரை பாதுகாக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மன அழுத்தம் , சோர்வு , இதய நோய்கள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புகள் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் வெப்பநிலை பொதுமக்களுக்கு எந்த வகையில் பாதிப்பை அளிக்கிறது என்பது தொடர்பில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பிரதான சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
“அண்மைய தினங்களாக நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உடல் பாதிப்புக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
மயக்க நிலமை , அதிக சோர்வு , தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. சிறு குழந்தைகள் , முதியவர்கள் , வெளியில் பணி புரிபவர்கள் , கட்டிட துறையில் பணி புரிபவர்கள் , விவசாயிகள் , வாகனத் துறைகளில் பணி புரிபவர்கள் உள்ளிட்டோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறான நோய் நிலமைகளை தவிர்ப்பதற்காக இளநீர் , எலுமிச்சை , தோடம் , மாதுளை போன்றவற்றை அருந்துவது முக்கியமாகும்.
விசேடமாக இந்த நாட்களில் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படின் நிச்சயமாக மாணவர்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும்.
அனைவரும் வழமைக்கு மாறாக நீரை அருந்த வேண்டும். தோல் நோய்கள் அதிகளவில் பரவக்கூடியமையால் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் நீராடுவது சிறந்தது.
அதிக நேரம் வாகனங்களுக்குள் தரித்து நிற்பதை தவிர்க்க வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலையானது எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரையில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.