விண்ணிற்கு பயணம் செய்யவுள்ள நான்கு வீரர்கள் - இஸ்ரோ வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!
27 மாசி 2024 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 1670
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது செல்லவிருக்கும் வீரர்களின் பெயர்களை இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்.
மனிதர்களைக் கொண்டு செல்லும் அந்த விண்கலமானது "ககன்யான்" என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று விண்வெளி வீரர்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.
விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில் களமிறங்கவுள்ள அந்த நான்கு வீரர்களின் பெயரை இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது.
விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
இதன்போது அந்த நான்கு வீரர்களின் பெயரையும் அறிவித்துள்ளார்.
இதன்படி, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் சுபான்ஷு சுக்லா என்பவர்கள் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணிற்கு பயணம் செய்யவுள்ளனர்.