பிரதமர் மோடி பல்லடம் வந்தார்
27 மாசி 2024 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 3389
என் மண்; என் மக்கள்' பாத யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று(பிப்.,27) மதியம் 3;10 மணியளவில் கோவை வந்தார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண்; என் மக்கள்' பாத யாத்திரை நிகழ்ச்சி நிறைவு விழா மற்றும் பா.ஜ., தேர்தல் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.
இதில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தெற்கு நோக்கி இருக்கும் வகையில், 80 அடி நீளம், 60 அடி அகலம் உடைய பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.மேடையின் மேல் பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு, 'வேண்டும் மோடி; மீண்டும் மோடி' என்ற வாசகத்துடன், மோடி மற்றும் அண்ணாமலை படங்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம், ஐந்து லட்சம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் வகையில் சேர்கள் போடப்பட்டுள்ளன.
ஏறத்தாழ, 250 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, பிரத்யேக பாதை வழியாக வரும் பிரதமர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுமக்களை சந்தித்து விட்டு மேடைக்கு வருகிறார். ஒரு மணி நேரம் பிரதமர் சிறப்புரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.