பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்...!
2 பங்குனி 2024 சனி 09:37 | பார்வைகள் : 3960
பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஓடு இல்லாத மற்றும் வண்ணமயமான உடலைக் கொண்ட இந்த கடல் நத்தைக்கு (sea slugs) "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு கடல் நத்தை இனங்கள் ஏற்கனவே பிரித்தானியா மற்றும் அயர்லாந்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வாழ்கின்றன.
இருப்பினும், ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா தனித்துவமாக திகழ்கிறது.
ஏனெனில் இதன் மிக நெருக்கமான உறவினர்கள் பொதுவாக வடக்கு ஸ்பெயின், செனகல் மற்றும் மத்திய தரைக்கடல் போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
இவை 5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) நீளம் கொண்ட சிறிய உயிரினம் என்றாலும், உணவுச் சங்கலிகளில் முக்கிய வேட்டையாடிகளாக (top predators) முக்கிய பங்கு வகிக்கின்றன.
CEFAS மற்றும் Instituto Espanol de Oceanografía ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கு கால்வாய் மற்றும் செல்டிக் கடலில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயணங்களின் போது, Pleurobranchaea britannica கண்டறியப்பட்டது.
பிரித்தானிய கடல் பகுதிகளில் இந்த வெப்ப மண்டல உயிரினங்கள் காணப்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
கடல் வெப்பநிலை உயர்வு, உயிரின இடப்பெயர்ச்சி (species migration) முறைகளை பாதிக்கும் ஒரு முக்கிய காரணி என்று நம்பப்படுகிறது.
மேலும் ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகாவின் வடக்கு நோக்கிய பயணம் இந்த மாற்றங்களின் செயல்பாட்டிற்கான அறிகுறியாக இருக்கலாம்.