நாய் கூண்டில் சொந்த மகனை அடைத்து வைத்து சித்ரவதை செய்த தாய்
2 பங்குனி 2024 சனி 10:06 | பார்வைகள் : 4296
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது மகனை சிறிய நாய்க் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்து பட்டினி கிடத்திய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஜூலை மாதம் மற்றும் நவம்பர் 2022 இடையில் தனது 12 வயது மகனை நாய்க் கூண்டில் அடைத்து, உறைபனியில் குளிர்ந்த நீரை ஊற்றி பலமுறை அடித்து, பட்டினி கிடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
வடகிழக்கு ஆஸ்திரியாவின் கிரெம்ஸில் உள்ள நீதிமன்றம் வியாழன் அன்று 33 வயதான அந்த பெண்மணிக்கு கொலை முயற்சி உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
அத்துடன், இவரது 40 வயது தோழிக்கும் 14 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பானது மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இரு பெண்களுக்கும் உளவியல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் தான் சமூக சேவகர் ஒருவரின் புகாரை அடுத்து அந்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 12 வயது சிறுவனின் நிலை கண்டு பரிதாபப்பட்ட அவர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
கடும் பனிப்பொழிவு நாளில் குளிர்ந்த நீரை அந்த சிறுவன் மீது கொட்டி அவர் சித்ரவதை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
தமது மகனை ஒழுக்கமாக வளர்ப்பதற்கு என்றே இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.