Paristamil Navigation Paristamil advert login

12 ஆவது தடவையாக உலகக்கிண்ண வலைபந்தாட்டத்தில் மகுடம் சூடிய அவுஸ்திரேலியா

12 ஆவது தடவையாக உலகக்கிண்ண வலைபந்தாட்டத்தில்  மகுடம் சூடிய அவுஸ்திரேலியா

7 ஆவணி 2023 திங்கள் 09:05 | பார்வைகள் : 3506


தென் ஆபிரிக்காவின் கேப்டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 61 - 45 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தங்கப் பதக்கத்தை சுவீரிகரித்து மீண்டும் உலகக் கிண்ண வலைபந்தாட்ட சம்பியனானது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் அவுஸ்திரேலியா சம்பியனானது இது 12 ஆவது தடவையாகும்.

உலகக் கிண்ண வலைபந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமாஃபோசா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணித் தலைவி லிஸ் வொட்சனிடம் கையளித்தார்.

ஞாயிறன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் 2019 சம்பியன் நியூஸிலாந்தை 52 - 45 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட ஜெமெய்க்கா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது.

கேப் டவுனில் 10 தினங்கள் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வலைபந்தாட்ட வீராங்கனையாகவும் அதிசிறந்த எதிர்த்தாடும் வீராங்கனையாகவும் இங்கிலாந்தின் கோல்நிலை எதிர்த்தாடும் வீராங்கனை ஹெலன் ஹூஸ்பி தெரிவுசெய்யப்பட்டார்.

அதிசிறந்த மத்திய கள வீராங்கனையாக நியூஸிலாந்தின் கேட் ஹெஃபனானும் சிறந்த தடுத்தாடும் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் கேர்ட்னி ப்றூசும் தெரிவாகினர்.

அவுஸ்திரேலியா 61 - 45 இங்கிலாந்து

இங்கிலாந்தின் லிவர்பூல், நெட்போல் அரினா அரங்கில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூஸிலாந்திடம் ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா, இம்முறை மிகத் திறமையாக விளையாடி தோல்வி அடையாத ஒரே  ஒரு  அணியாக உலக வலைபந்தாட்ட சம்பியனானது.

இந்த வருட இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 61 - 45 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியா உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்