Paristamil Navigation Paristamil advert login

நான்கு மாவட்டங்களில் பரிசோதனை: 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

நான்கு மாவட்டங்களில் பரிசோதனை: 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

5 பங்குனி 2024 செவ்வாய் 02:35 | பார்வைகள் : 2269


தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் உள்ள மாவட்டங்களில், மக்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. 

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியா குமரி, திருப்பத்துார் ஆகிய நான்கு மாவட்டங்களில், முதற்கட்டமாக புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை, மக்கள் நல்வாழ்வு துறை செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தில், 6.07 லட்சம் பெண்களுக்கு மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2.33 லட்சம் பேருக்கு, பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நான்கு மாவட்டங்களில் உள்ள, 69,000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தததில், 1,372 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், 52,000 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 2,655 பேருக்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

மொத்தம் 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்ட, 4,027 பேருக்கு முதற்கட்ட சிகிச்சையை துவக்கி உள்ளோம்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், உயிர்இழப்பு போன்றவற்றை தடுக்கலாம். எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்