Paristamil Navigation Paristamil advert login

வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் - ராகுல் காந்தி

வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் - ராகுல் காந்தி

5 பங்குனி 2024 செவ்வாய் 02:46 | பார்வைகள் : 2598


நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என அவர் குற்றம் சாட்டி வருகிறார். இந்த பணியிடங்கள் அனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும் என அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "நாட்டின் இளைஞர்களே ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதுடன், மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டுகிறார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முக்கியமான துறைகளை பொறுத்தவரை, ரெயில்வேயில் 2.93 லட்சம் பணியிடங்கள், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சம், ராணுவ அமைச்சகத்தில் 2.64 லட்சம் பணியிடங்கள் காலியாகி இருக்கின்றன.

15 மிகப்பெரிய துறைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இருக்கிறதா?

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவலகத்திலேயே ஏன் அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன?

நிரந்தர பணிகளை வழங்குவதை ஒரு சுமையாக கருதும் பா.ஜனதா அரசு தொடர்ந்து ஒப்பந்த பணி முறையை ஊக்குவித்து வருகிறது. அவற்றில் பாதுகாப்பும் இல்லை, மரியாதையும் இல்லை.

காலியான பணியிடங்களை பெறுவது நாட்டின் இளைஞர்களின் உரிமை. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு வலிமையான திட்டத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

இளைஞர்களுக்கு மூடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான கதவுகளை திறப்பதே இந்தியா கூட்டணியின் உறுதிப்பாடு ஆகும். இளைஞர்களின் தலைவிதி, வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை அகற்றி சூரிய உதயத்தை காணும்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்