ஜேர்மனி மருத்துவமனைக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு! பொலிசார் அதிரடி
5 பங்குனி 2024 செவ்வாய் 16:03 | பார்வைகள் : 3645
ஜேர்மனியில், 400 நோயாளிகள் இருந்த மருத்துவமனைக்குள் நுழைந்த பெண் ஒருவர், அங்கிருந்தவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன், பட்டாசுகளையும் கொளுத்தியுள்ளார்.
நேற்று மாலை சுமார் 7.40 மணியளவில், 65 வயதுடைய பெண்ணொருவர், மேற்கு ஜேர்மனியிலுள்ள Aachen நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். தகவலறிந்த பொலிசார் மருத்துவமனையை சுற்றி வளைத்து நோயாளிகளை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றியுள்ளனர்.
பிசியோதெரபி பிரிவு ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அந்தப் பெண், பின்னர் ஒரு அறைக்குள் பதுங்கிக்கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில், அவர் இருந்த அறைக்குள்ளிருந்து புகை வரத்துவங்கியுள்ளது. இரவு 11.00 மணிவரை அந்தப் பெண்ணுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்ற பொலிசாருக்கு அவர் பதிலளிக்காமல் போகவே, அதிரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்த பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டு, கைது செய்தார்கள். அவர் அந்த அறைக்குள் பட்டாசுகளைக் கொளுத்தியது தெரியவந்தது.
படுகாயமடைந்த அந்தப் பெண் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
விசாரணையில், அந்தப் பெண் அருகிலுள்ள Eschweiler என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் தற்கொலை நோக்கம் கொண்டிருந்ததாக பொலிசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பொலிசாரோ, மருத்துவமனை ஊழியர்களோ, அந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.