இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்யும் கனடா
6 பங்குனி 2024 புதன் 08:57 | பார்வைகள் : 3029
காஸா மீதான தாக்குதல் நீடித்துவரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களை கனடா ஏற்றுமதி செய்துள்ளதாக குறிப்பிட்டு கனேடிய சட்டத்தரணிகள் குழு கனடாவின் உலகளாவிய விவகார அமைச்சின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
அந்த ஆயுதங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் பயன்படுத்தப்படலாம் என்றும் வாதிட்டுள்ளனர்.
ஹமாஸ் படைகள் தாக்குதல் முன்னெடுத்த அக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர் குறைந்தபட்சம் 21 மில்லியன் அமெரிக்க டொலர் பெருமதியன ஆயுதங்களுக்கு கனடா அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நடவடிக்கை சட்டவிரோதமல்ல என வாதிட்டுள்ள கனடா, அந்த ஆயுதங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் CLIHR என்ற சட்டத்தரணிகள் அமைப்பு பெடரல் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சரே இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தவர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அப்படியான ஏற்றுமதி சட்டவிரோதம் என்றும் கனடாவின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் அதன் சர்வதேச சட்டக் கடமைகளை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல் இதுவரை 30,500 பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது.
ஏறக்குறைய இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் காசாவில் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது.