செங்கடலில் முக்கிய இணைய கேபிள்கள் சேதம்...!
6 பங்குனி 2024 புதன் 15:54 | பார்வைகள் : 4182
செங்கடலில் கடலுக்கடியில் உள்ள பல தகவல் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே இணைய சேவை 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரும் தெரிவித்துள்ளார்.
ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய வழங்குனர்களின் கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து இணையச் சேவை தடைபட்டுள்ளது.
15 கேபிள்களில் நான்கு சமீபத்தில் துண்டிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட எச்.ஜி.சி குளோபல் கம்யூனிகேஷன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசியா-ஆப்பிரிக்கா- ஐரோப்பா 1, ஐரோப்பா இந்தியா கேட்வே, சீகாம் மற்றும் டிஜிஎன் வளைகுடா உள்ளிட்ட நான்கு முக்கிய தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் கேபிள்கள் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்தமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
கேபிள்கள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதா அல்லது கப்பல்கள் நங்கூரம் இடப்பட்டதன் மூலம் துண்டிக்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளா்ச்சியாளா்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஈரான் ஆதரவு ஹவுத்தி இயக்கம் கடலில் கப்பல்களைத் தாக்குவதுடன் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களையும் நாசப்படுத்தக்கூடும் என யேமன் எச்சரித்தது.
மேற்கு யேமனின் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாங்கள் கேபிள்களை குறிவைத்து தாக்கியதை மறுத்ததோடு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத் தாக்குதல்கள் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கடற்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அதன் போர்க்கப்பல்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு உதவுகின்றன.
ஆபிரிக்க தொலைத்தொடர்பு கேபிள் ஆபரேட்டர் சீகாம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், "ஆரம்ப சோதனையானது பாதிக்கப்பட்ட பகுதி தெற்கு செங்கடலில் உள்ள யேமன் கடல் எல்லைக்குள் இருப்பதைக் குறிக்கிறது" என்று கூறினார்.
செங்கடலில் கடலுக்கடியில் தொலைத்தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டதை பென்டகன் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.