545 நாட்களாக ரயிலில் வாழ்க்கை நடத்தி வரும் ஜேர்மன் இளைஞர்: ஒரு சுவாரஸ்ய தகவல்
7 பங்குனி 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 1334
ஜேர்மன் நாட்டவரான இளைஞர் ஒருவர், ஒன்றரையாண்டுகளாக ரயிலிலேயே வாழ்க்கை நடத்திவருகிறார்.
ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்தைச் சேர்ந்தவரான Lasse Stolleyக்கு ரயில் பயணம் என்றால் உயிர் என்றே கூறலாம். தனக்கு 16 வயது இருக்கும்போது, தனது ஆசையை தனது பெற்றோரிடம் தெரிவிக்க, மகனுக்கு என்ன இப்படி ஒரு விபரீத ஆசை என பெற்றோர் அவரை தடுக்க முயல, தான் செய்வது சட்டப்பூர்வமான விடயம்தான் என அவர்களை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய Lasse, இப்போது ஒன்றரையாண்டுகளாக ரயிலிலேயே வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறார்.
சாப்பாடு, வேலை, தூக்கம் என எல்லாவற்றையும் ரயிலிலேயே முடித்துக்கொள்ளும் Lasse, நீச்சல் குளங்களில் குளியல் போட்டுக்கொண்டு, ஜாலியாக ஜேர்மனியை சுற்றி வருகிறார்.
வருடாந்திர ரயில் பயணச்சீட்டில், முதல் வகுப்பில் பயணம் செய்யும் Lasseக்கு ஆண்டொன்றிற்கு 8,500 பவுண்டுகள் செலவாகிறது. அதாவது, இந்திய மதிப்பில் 8,95,922 ரூபாய், இலங்கை மதிப்பில் 33,26,117 ரூபாய்.
ஒன்லைனில் புரோகிராமராக பணியாற்றும் Lasseக்கு ஒரே ஒரு பயம். இரவு நேரப் பயணங்களின்போது, உங்கள் உடைமைகள் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது என்று கூறும் அவர், ரயில்களில் திருட்டு, தாக்குதல் மற்றும் அடாவடி செய்யும் பயணிகளை தடுக்க போதுமான பாதுகாவலர்கள் இல்லை என்கிறார்.
விடயம் என்னவென்றால், வருங்காலத்தில், ஜேர்மன் ரயில்வேயில் ஆலோசகராகப் பணியாற்றவேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.