காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ! பிரதமர் மோடியின் விமர்சனமும், கார்கே பதிலும்!
8 சித்திரை 2024 திங்கள் 12:25 | பார்வைகள் : 2142
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தம் இருக்கிறது என பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு, காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை பிரதிபலிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.
இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலை தளத்தில் கார்கே கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது. மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும். 1942ல் வெள்ளையனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி, அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.