Paristamil Navigation Paristamil advert login

மருந்து பற்றாக்குறை, சிகிச்சைகள் தாமதம் உயிரோடு விளையாடக்கூடாது !

மருந்து பற்றாக்குறை, சிகிச்சைகள் தாமதம் உயிரோடு விளையாடக்கூடாது !

16 ஆடி 2023 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 2744


நாட்டின் சுகாதாரத்துறை தொடர்பில் மக்கள் மிகுந்த கவலைக்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர். இலங்கை வாழ் மக்களின் நம்பிக்கைக்குரியதும், அனைத்து மக்களாலும்  இலவசமாக மருத்துவ சேவைகளின் பொருட்டு இலகுவாக அணுக கூடியதுமான அரச வைத்தியசாலைகள்  இன்று, மருந்து வகைகளுக்கான பற்றாக்குறை காரணமாகவும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு காரணமாகவும் மற்றும் காரணம் தெரியாத நோயாளர்களின்  திடீர் மரணங்கள் தொடர்பாகவும்  மக்கள் மத்தியில் அரச வைத்தியசாலைகள்   மிகுந்த விமர்சனத்துக்கு ஆளாகி  வருகின்றன.

இந்த வகையில் அரச வைத்தியசாலைகள் செயல்படுமானால், அதை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொல்லொண்ணா பாதிப்புகளுக்கு ஆளாவதை தவிர்க்க முடியாது போகும். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டங்களின் போது சுகாதாரத்துறை  ஊழியர்களும்  தமது கணிசமான  பங்களிப்பை செலுத்தினர்.

அந்தவகையில், அவர்கள் நாட்டின் அரச வைத்தியசாலைகள் எதிர்நோக்கும்  மருந்து வகைகளுக்கான பற்றாக்குறை, வைத்தியார்கள் மற்றும் ஊழியர்களுக்கான   பற்றாக்குறை அத்துடன் அங்கு நிலவும் ஊழல்கள் என்பவற்றை வெளிக்கொணர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று வரை அரச வைத்தியசாலைகளில் குறைபாடுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

மக்கள் மத்தியில் விரக்தி

நாட்டின் பொருளாதாரம் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகின்ற போதிலும், சுகாதாரத்துறையின் முன்னேற்றம் கேள்விக்குறியதாகவே காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி அண்மைக் காலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட  திடீர் மரணங்கள் மக்கள் மத்தியில் பாரிய விரக்தியை தோற்றுவித்துள்ளது மாத்திரமன்றி, சுகாதார துறைக்கு எதிரான அதிர்வலைகளையும் உருவாக்கி வருகிறது.

குறிப்பாக பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்றோட்டம் காரணமாக  அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் பின்னர் தடுப்பூசி ஏற்றப்பட்ட  நிலையில் உயிரிழந்தமை, அதற்கு  முன்னர் மற்றொரு யுவதி  சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமை என்பன மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  

வைத்தியசாலை சீர்கேடுகள் தொடர்பில்  அரசாங்கத்தின் கவனத்துக்கு தொடர்ச்சியாக கொண்டு வருகின்ற போதிலும், அது தொடர்பில்  அரசாங்கம் கணக்கில் கொள்ளவில்லை என்பதே  பொதுவான குற்றச்சாட்டாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.  

எனினும், பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன  அண்மையில் கருத்து வெளியிடுகையில், கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை நோய் காரணமாக 7 பேர் மரணித்ததாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. குறித்த நோயாளிகளின் உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த வைத்தியசாலையில் ஜனவரியில் ஒரு மரணமும், ஜூனில் 6 மரணங்களும் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மறுபுறம், இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக சிறுவர்கள் மத்தியில் புற்றுநோய் அதிகரித்து  வருவதாகவும்,  வருடத்துக்கு சுமார்  900 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 100  சிறுவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கையின் கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் அரச வைத்தியசாலைகள்  மருந்து பற்றாக்குறை, தாமதமான அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றம் என்ற வகையில்  வைத்தியசாலை அமைப்பு சீர்குலைந்து வருகிறது. இதுவே உயிர் இழப்புகளுக்கு காரணம் என்று மக்கள் குறை கூறுகின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் 1.1 மில்லியன் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் தாதிகள், வைத்தியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளர்கள்  ஆகியோரும் அடங்குவர். பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க சென்றாலும், 27.6% பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் வெளியேற்றம்

மேலும் , கடந்த சில மாதங்களில் 800 க்கும் அதிகமான  மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும்,  அதேவேளை குறித்த  அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு குறைந்துள்ளதாகவும் குறிப்பாக இருதய நோய்க்கான  மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள், மயக்க மருந்துகள்  மற்றும் புற்றுநோய்க்கான  கீமோதெரபி மருந்துகள் என்பன கடந்த ஆண்டில் தீர்ந்து விட்டதாகவும், அதற்கான  மாற்றீடுகள் போதுமான அளவில் வந்து சேரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இயந்திர பராமரிப்பில் தாமதம், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும்  மட்டுப்படுத்தப்பட்ட மின்சார  விநியோகம் போன்ற காரணங்களால் பல பொது வைத்தியசாலைகளிலும் ஆய்வக பரிசோதனைகள்  நிறுத்தப்பட வேண்டிய அல்லது கால தாமதமாகும்  நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,  மருந்துகள் பற்றாக்குறை மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றமை என்பன நோயாளர்களை வெகுவாக பாதித்துள்ளது.

இதேவேளை, பொது வைத்தியசாலைகளில் ஆய்வகப் பரிசோதனைகள் இல்லாததால், தனியார் வைத்தியசாலைகளை நாடுவதற்கும், இலவச பரிசோதனைகளுக்கு பணம் செலுத்துவதற்கும் மக்களை கட்டாயப்படுத்துகிறது.

மேலும், ஆய்வகங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவரும், சுகாதார மேம்பாட்டு சிரேஷ்ட  விரிவுரையாளருமான வைத்தியர் மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதுடன், "நாங்கள் அதிக எண்ணிக்கையில் எங்கள் வைத்தியர்களை இழந்து வருகிறோம். எனவே நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தனியார் வைத்தியசாலைகள்

மறுபுறம் தனியார் வைத்தியசாலைகளை நாட முடியாத நிலையில் சாதாரண, பாமர மக்கள் காணப்படுகின்றனர். அங்கு பன்மடங்கு கட்டணங்கள் அறவிடப்படுவதன் காரணமாக செல்வந்தர்கள் மாத்திரமே தனியார் வைத்தியசாலைகளின் படிகளை ஏற முடிகிறது.

குறிப்பாக  ஒருவர் தனது இதயத்தில் 90% அடைப்பு ஏற்பட்டதால் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்றாலும் கூட அவர்  அறுவை சிகிச்சைக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக அரச வைத்தியசாலைகளையே நம்பி காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனிடையே, வருமானம் ஏதுமின்றி சராசரி வாழ்க்கைச் செலவு  பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான அல்லது அனைத்து குடும்பங்களும் பொதுவான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றன.  

இதனால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போஷாக்கான  உணவளிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அத்துடன் 80 சதவீத மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால்  பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் உணவையா  மருந்தையா  கொள்வனவு செய்வது என்ற தெரிவுக்கு ஆளாகின்றனர்.

இந்திய மருந்துகளில் சந்தேகம்

இதேவேளை, "பல்வேறு வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லாமல்  அல்லது பற்றாக்குறையாக உள்ளதால் " இறக்குமதி செய்யப்படும் அந்த மருந்துகளின் விலை அவர்கள் முன்பு செய்ததை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்பதுடன்  இது அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகள் செயல்படும் திறனை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளிலேயே இலங்கை அதிகம் தங்கியுள்ளது. இந்த வகை மருந்துகள் தொடர்பில் அதிகம் சந்தேகம் நிலவுகின்றது. குறிப்பாக அண்மையில் நுவரெலியாவில்  20  பேருக்கு மேற்கொள்ளப்பட்ட  கண் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக  அவர்கள் கண் பார்வையை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள்  மொனராகலை, வெள்ளவாய மற்றும் பதுளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.  

குறித்த மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக  வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை  பயன்படுத்திய உஸ்பெஸ்கிஸ்தானைச்  சேர்ந்த 20 குழந்தைகள் அண்மையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அநேக மருந்துகளின் தரம் குறித்தும் அவற்றை  நம்பியிருப்பது குறித்தும்  உலக சுகாதார நிறுவனம்  மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் அண்மையில் மருந்து வகைகளுக்கு 16 வீத விலை குறைப்பை மேற்கொண்டது. எனினும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளின் விலைகள் மாற்றமடையவில்லை என்றும் தமது சம்பளத்தில் பெரும் பகுதியை மருந்துக்காக செலவிட வேண்டி இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள  மக்கள், சுகாதார ரீதியாகவும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு  சுகாதாரதுறையை சார்ந்ததாகும். பாமர மக்களுக்கு மாத்திரமன்றி சாதாரண   மக்கள்  அனைவருக்கும் உயிர்காக்கும் ஒரே இடமாக விளங்கும் அரசாங்க வைத்தியசாலைகள் குறையின்றி தமது தார்மீக பணியை தொடரக் கூடிய சூழலை  உருவாக்குவது இன்றியமையாதது. நோயால் பரிதவிக்கும் மக்களின் உயிரோடு விளையாடாமல் காத்திரமான நடவடிக்கை எடுப்பது அனைவரதும்  கடமையாகும்.  

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்