கோடை வெப்பம்: பிரதமர் மோடி ஆலோசனை
12 சித்திரை 2024 வெள்ளி 02:49 | பார்வைகள் : 2163
இந்த ஆண்டு கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டில்லியில் நடந்தது.
இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு கோடைகாலத்தில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் லோக்சபா தேர்தலும் நடக்கிறது.
வெப்ப அலையை சமாளிக்க முழு அரசும் தயார் நிலையில் இருக்க தேவையான நடவடிக்கைளை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சுகாதாரத்துறையினர், அத்தியாவசிய மருந்துகள், உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
வெப்ப அலையின் தாக்கம் குறித்து டிவி, ரேடியோ, சமூக வலைதளங்கள் வாயிலாக மாநில மொழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.