தெற்கை தேய வைக்க பார்க்கிறது மத்திய அரசு: நடிகர் கமல் குற்றச்சாட்டு
12 சித்திரை 2024 வெள்ளி 02:50 | பார்வைகள் : 1881
தெற்கை (தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை) தேய வைக்க பார்க்கிறது மத்திய அரசு,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் குற்றம் சாட்டினார்.
மதுரையில் தி.மு.க., கூட்டணி மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ஆனையூர், கோ.புதுாரில் அவர்பேசியதாவது: மதுரையின் பாசத்தையும் வீரத்தையும் பிரிக்க முடியாது. மதுரையையும் கமலையும் பிரிக்க முடியாது. மதுரையையும் தி.மு.க.,வையும் பிரிக்க முடியாது.
பல திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி இங்கு கொண்டு வந்துள்ளார். அவரது வழியில் முதல்வர் ஸ்டாலினும் தொடர்கிறார். இது பல புரட்சிகளை செய்த மண். பல சரத்திரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் மக்கள் மறக்கவில்லை. கீழடி உலகின் பெருமை. மனித வரலாற்றின் ஒரு பகுதி. ஆனால் அதன் ஆய்வை தடுக்கப்பார்க்கின்றனர்.
செம்மொழி அந்தஸ்து பெற்ற சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழி மதிக்கப்படுவதில்லை. நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.
குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் மதுரையில் மட்டும் இன்றும் ஒற்றை செங்கலுடன் காட்சியளிக்கிறது. மத்திய அரசு கட்டிக்கொடுக்கவில்லை என்றால் தமிழகம் கட்டிக்கொள்ளும். அதற்கான காட்சிகள் மாறுகின்றன. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து மறுக்கப்படுகிறது.
இப்படி 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு தொடர்ந்து திட்டங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என அப்போது மறைந்த முதல்வர் அண்ணாதுரை கூறிய கூற்று தற்போது உண்மையாகிறதோ. தெற்கை தேய வைக்க பார்க்காதீர்கள். மதுரைக்கு 'உறங்காநகர்' என பெயர் உண்டு. மக்கள் இங்கே உறங்கமாட்டார்கள். விழித்துக்கொண்டுள்ளவர்களை உங்களால் பிளவுப்படுத்த முடியாது. அதிகாரம் நல்லவர்கள் கைகளில் இருக்க வேண்டும்.
நாட்டில் தமிழகத்தில் தான் 43 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். கல்வி வளர்ச்சியில் 2050ல் நாடு அடைய வேண்டிய வளர்ச்சியை தமிழகம் இப்போதே எட்டிவிட்டது.
கல்வி தான் தி.மு.க., ஆட்சி முறையின் ஆயுதம். கல்வியை அனைவருக்கும் கிடைக்க செய்வது தான் குறிக்கோள். ஹிந்தி மொழியை எங்களிடம் திணிக்க வேண்டாம். எங்களுக்கு வியாபாரத்திற்கு தேவையான ஹிந்தி தெரியும்; இங்குள்ள வடமாநிலத்தவர்களுக்கு தமிழும் தெரியும். தேசியகீதமே பெங்காலியில் தான் உள்ளது. இவ்வாறு பேசினார்.