Paristamil Navigation Paristamil advert login

Essonne : துப்பாக்கிச்சூடு! - கொள்ளையர்களை துரத்திச் சென்ற ஏழு காவல்துறையினர் காயம்!

Essonne : துப்பாக்கிச்சூடு! - கொள்ளையர்களை துரத்திச் சென்ற ஏழு காவல்துறையினர் காயம்!

12 சித்திரை 2024 வெள்ளி 13:12 | பார்வைகள் : 7626


இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீடொன்றில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். அதன்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது., 

ஏப்ரல் 12 ஆம் திகதி, இன்று வெள்ளிக்கிழமை காலை 5. 30 மணி அளவில் Orsay (Essonne) நகரில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அங்குள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளையும் பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளனர். 

பின்னர் அவர்கள் A86 நெடுஞ்சாலை வழியாக தப்பிச் செல்ல முற்பட, அவர்களை குற்றவியல் தடுப்பு பிரிவினர் கைது செய்ய முற்பட்டனர். மிக நீண்ட தூரம் கொள்ளையர்களை துரத்திச் சென்றனர். 

அதன்போது, Maisons-Alfort பகுதியில் காவல்துறையினர் மோதி தள்ளிவிட்டு தப்பிச் சென்றதில், நான்கு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். 

பின்னர் கொள்ளையர்களின் மகிழுந்து 94N நெடுஞ்சாலைக்குள் நுழைந்தது. அங்கு வைத்து அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்ட மேலும் இரு காவல்துறையினர் காயமடைந்தனர். 

பின்னர் அங்கிருந்து ஒரு கிலோமீற்றர் இடைவெளியில்  Rue de la Tropez வீதியில் வைத்து அவர்களது மகிழுந்து துப்பாக்கியால் சுடப்பட்டு நிறுத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது கொள்ளையர்கள் திருப்பிச் சுட்டதில் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்தார். 

மொத்தமாக மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். 

கொள்ளையடிக்கப்பட்டபோது வீட்டின் உரிமையாளர் உறங்கிக்கொண்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்