மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளித்தபடி மிதந்து வந்த படகு...

13 சித்திரை 2024 சனி 07:58 | பார்வைகள் : 4910
ஸ்பெயினின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகு தத்தளித்தபடி மிதந்து வந்ததை அந்நாட்டு கடற்படையினர் கண்டறிந்தனர்.
படகுக்கு அருகில் சென்று பார்த்தபோது அதில் 4 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த படகை இன்றையதினம் (12-04-2024) காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் மீட்டு கொண்டு வந்துள்ளனர்.
படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.
அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அங்கிருந்து புலம்பெயர்ந்து ஸ்பெயினில் குடியேறுவதற்காக படகில் வந்தபோது இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
அந்த படகில் வேறு யாரும் இல்லை. புறப்படும்போது வேறு யாரேனும் அவர்களுடன் வந்தார்களா? என்ற விவரமும் தெரியவில்லை.