தொழிலாளர்களின் விவகாரத்தில் யார் யாரை ஏமாற்றுகின்றனர்?
15 சித்திரை 2024 திங்கள் 11:46 | பார்வைகள் : 1521
‘உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகளாவிய தலைவர் என்ற உயரிய அங்கீகாரத்தை மலையக உறவுகளிடம் சமர்ப்பிக்கின்றேன்’ எனத்தெரிவித்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான். இளம் தலைவர் என்ற கெளரவம் அவருக்கு கடந்த வாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியின் நான்காவது அரசியல்வாரிசாக ஜீவன் விளங்குகின்றார். அவரது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டமான் கட்சியின் தலைவராகவும் செயலாளராகவும் விளங்கியதுடன் அமைச்சராக செயற்பட்டவர். ஆறுமுகனின் தந்தை அமரர் இராமநாதன் தொண்டமான் மத்திய மாகாண சபையின் முதல் கல்வி அமைச்சர் என்ற பெருமைக்குரியவர். இராமநாதனின் தந்தை அமரர் செளமியமூர்த்தி தொண்டமானை முழு இலங்கையும் மாத்திரமல்லாது தமிழகமும் அறியும். ஆகவே அந்த பரம்பரையில் வந்த ஜீவன் தொண்டமான் இளம் தலைவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அதிசயமல்ல.
இது இவ்வாறிருக்க, இளம் உலகளாவிய தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பேரவையின் புதிய தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இப்பேரவையானது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் வர்த்தக சமூகத்தினரை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்பாகும். இவ் அமைப்பு பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான உள்ளக வளங்களை மேம்படுத்தல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இருப்பினும் நான்கு தலைமுறைகளாக தோட்டத்தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் ஆதரவளித்து வந்த ஒரு தொழிற்சங்க/அரசியல் கட்சியின் பொறுப்பான பதவியிலிருக்கும் அவர், தொழிலாளர்களின் மனதில் இளம் தலைவர் என்ற மகுடத்துடன் வீற்றிருக்க வேண்டுமானால், அவர்களின் பல ஆண்டு கால பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமாக செயற்படல் காலத்தின் தேவையாக உள்ளது. தான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வைக்கும் செயற்பாடுகளில் அவர் எந்தளவுக்கு ஆளுமையாக செயற்படுகின்றாரோ, அதுவே அவருக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரமாக இருக்கும் என்பதில் சந்தேகங்களில்லை.
மிக முக்கியமாக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான சம்பள விவகாரத்தில் யாரை யார் ஏமாற்றுகின்றார்கள் என்ற குழப்பம் பெருந்தோட்ட மக்கள் மத்தியிலும் அவர்களுக்காக குரல் கொடுப்போரின் மத்தியிலும் உருவாகியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த விவகாரம் இன்று அவரையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாட் சம்பள கோரிக்கையான 1700 ரூபாவை வழங்குவதற்கு எவ்வகையிலும் கம்பனிகள் தயாராக இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் திகதி தலவாக்கலைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்னும் முப்பது நாட்களில் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபாய் கிடைப்பது உறுதி என தொழிலாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். அதாவது சித்திரை மாதம் புது வருடப்பிறப்பை கொண்டாடவுள்ள தொழிலாளர்கள் அனைவரும் புத்தாண்டு பரிசாக இந்த சம்பள உயர்வு இருக்கப்போகின்றது என்பதே அதன் அர்த்தமாகும். ஆனால் திடீரென அதே மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொழிலாளர்களுக்கு 33% ஆன சம்பள அதிகரிப்பையே கம்பனிகள் வழங்க முன்வந்துள்ளன, எனவே இதை நாம் ஏற்க முடியாது ‘ என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். சித்திரைப் புத்தாண்டை தமது சம்பள அதிகரிப்போடு வரவேற்கத் தயாரான தொழிலாளர்களில் ஒரு சாரார் மாத்திரமே இது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது முக்கிய விடயம். அவர்கள் அனைவரும் இ.தொ.காவின் ஆதரவாளர்களாக இருந்தனர். ஏனையோர் இந்த அறிவிப்பு குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் வேறு தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்கள். சம்பள விவகாரமானது, இவ்வாண்டு இடம்பெறவுள்ளதாக் கூறப்படும் தேர்தல்களை மையமாக வைத்தே பேசப்படுகின்றது என்பதை மாற்று தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருந்தன. ஆகவே இவ்விடயத்தில் ஜனாதிபதியோ அல்லது இ.தொகாவோ வழங்கும் வாக்குறுதிகளால் ஆகப்போவது ஒன்றுமில்லையென அவர்கள் நன்கறிந்திருந்தனர். இது குறித்து தமது ஆதரவாளர்களுக்கு அவர்கள் விளக்கமளித்திருந்தனர்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திரங்களை நாட்டு மக்கள் உட்பட தொழிலாளர்களும் நன்கறிந்தே இருக்கின்றனர். அவர் இ.தொ.காவை ஏமாற்றுகிறாரா, அல்லது இ.தொ.கா தொழிலாளர்களை ஏமாற்றுகின்றதா, இந்த இரு தரப்பினரையும் கம்பனிகள் ஏமாற்றுகின்றனவா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே சம்பள அறிவிப்பை விடுத்து தொழிலாளர்களின் ஆதரவை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற இ.தொ.காவின் எண்ணத்தை அரசாங்கமும் கம்பனிகளும் தகர்த்து விட்டன.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு ஆதரவு தரலாம். ஆனால் தொழிலாளர்களின் வேதனம், குடியிருப்பு மற்றும் காணி உரித்து பிரச்சினைகளை அவர் தீர்த்து வைக்க வேண்டும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் மலையகப்பிரதேசம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.
நுவரெலியா மாவட்ட வாக்குகள் மாத்திரம் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை. குறித்த மாவட்டத்தின் வாக்குகளை மாத்திரம் நம்பி ஜனாதிபதியும் இல்லை. ஆனால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவி உட்பட வாகனங்கள் , ஏனைய சலுகைகளைப் பெற்று மக்கள் மத்தியில் வலம் வரும் அமைச்சர் ஜீவன் தனது வாக்காளர்களுக்கு பதில் கூற வேண்டுமே?
இப்போது வேதனம் மாத்திரமில்லை. இந்திய அரசாங்கம் நிதி வழங்கி ஆரம்பித்து வைத்த பத்தாயிரம் வீட்டுத்திட்டமானது அடிக்கல் நாட்டியதோடு அப்படியே உள்ளது. தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரித்து வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் ஜீவன் பாராளுமன்றத்திலேயே கடந்த பெப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார். தோட்டத்தொழிலாளர்களின் காணி உரித்துக்கு அமைச்சரவையானது இன்னும் முழுமையான அங்கீகாரத்தை வழங்கவில்லை. 2 ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க அமைச்சரவை அனுமதி என்ற செய்திகள் பரவலாக வெளிவந்திருந்தன. ஆனால் தேடிப்பார்த்ததில் அரசாங்கத்துக்கு சொந்தமான தோட்டங்கள் மற்றும் கம்பனி தோட்டங்களில் வாழ்ந்து வருபவர்களில் 4,151 பேருக்கே அந்த உறுதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை முடிவுகள் காட்டின. இவர்களில் எத்தனைப்பேர் தொழிலாளர்கள், இவர்கள் சிங்களவர்களா தமிழர்களா போன்ற விபரங்கள் எதுவும் இல்லை. ஆகவே இதுவும் அரசாங்கத்தின் ஒரு ஏமாற்று அல்லது சமாளிப்பு அரசியலாகவே உள்ளது.
இந்த அமைச்சரவை அறிவிப்பு குறித்து இ.தொ.கா எதுவுமே குறிப்பிடவில்லையெனும் போது இதுவும் சாத்தியமாகாத ஒரு திட்டம் என்று தான் கருத வேண்டியுள்ளது. வழமையாக இலங்கையில் புத்தாண்டு காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ,மத குருமார்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவர். இதில் மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் வாழ்த்துச்செய்திகள் வித்தியாசமானதாக இருக்கும். தொழிலாளர்களின் வாழ்க்கையில் சுபீட்சம் பெருக வேண்டும் என வருடத்தின் முதல் நாளிலும், தொழிலாளர்களின் வாழ்க்கையில் மங்கலம் பொங்க வேண்டுமென தைப்பொங்கல் தினத்திலும் வாழ்த்தும் மலையக அரசியல்வாதிகள், வறுமையெனும் நரகாசுரன் ஒழிய வேண்டுமென்ற வார்த்தைகளை தீபாவளி தினத்தில் மறக்காமல் வாழ்த்துச்செய்தியாக போட்டு விடுவர்.
ஆனால் மேற்கூறிய சகல விடயங்களையும் பெற்றுக்கொடுக்கவே தம்மை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள் என்பதை மாத்திரம் மறந்து விட்டு சகல பண்டிகைகளையும் அனுபவித்து கொண்டாடும் தரப்பினராக இவர்கள் மாத்திரமே உள்ளனர். இந்த பாரம்பரியம் மலையகத்தில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இம்முறையும் அப்படியே! வருடத்தின் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்ற முடியாத கட்சியாக இ.தொ.காவும் அதை வேடிக்கை பார்த்து இரசித்துக்கொண்டிருக்கும் ஏனைய மலையகக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றும் நடவாதது போன்று சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை அள்ளி வீசிக்கொண்டிருப்பர்.
நன்றி வீரகேசரி