'GOAT' படப் பாடல் சர்ச்சை வரிகள் தொடர்பில் மனம் திறந்த பாடலாசிரியர்!
17 சித்திரை 2024 புதன் 15:02 | பார்வைகள் : 2110
நடிகர் விஜய் நடித்துள்ள 'GOAT' படத்தில் இருந்து ‘விசில் போடு’ என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது. இதன் வரிகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் ஆசையை சினிமாவில் வெளிப்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவருக்குத் தொடர்ந்து சர்ச்சைகளும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அவர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனக் கட்சி பெயரை அறிவித்ததும் அவருடைய 'GOAT' திரைப்படம் எப்படி இருக்கும் அரசியல் சார்ந்து விஷயங்கள் படத்தில் இருக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
குறிப்பாக, செப்டம்பர் 5 என்று படத்தின் ரிலீஸ் டேட்டை அறிவித்தப் பின்னர், வெளியான முதல் பாடல் ‘விசில் போடுதான்’. பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலில் மது தொடர்பான வார்த்தைகள், ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? கேம்பயினை தொறக்கட்டுமா?’ என எழுதிய அரசியல் தொடர்பான வரிகள் எனப் பலவும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
இதுதொடர்பாக இந்தப் பாடலை எழுதிய மதன் கார்க்கி விளக்கம் கொடுத்துள்ளார், “இந்தப் பாடல் படத்தின் பூஜைக்கு மறுநாள் எழுதப்பட்டது. அப்போது விஜய் சார் கட்சி அறிவிப்பைக் கூட வெளியிடுடவில்லை. ஆனால், பாடலில் உள்ள பார்ட்டி என்பதை நீங்கள் அரசியல் கட்சியாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று வெங்கட்பிரபு என்னிடம் சொல்லி இருந்தார். அதனால், அதையும் மனதில் வைத்துதான் எழுதினேன்” என்றார்.
மேலும், பாடல் ரீச் குறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, “சில பாடல்கள் மெதுவாகதான் ரசிகர்களிடம் சென்று சேரும். செல்பி புள்ள, கூகுள் கூகுள் பாடல்களுக்கும் கூட இப்படி தான் ஆரம்பத்தில் கலவையான ரெஸ்பான்ஸ் வந்தது. இப்போது பாடலைக் கொண்டாடுகிறார்கள். அதுபோலதான், இந்தப் பாடலும் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.