Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

19 சித்திரை 2024 வெள்ளி 13:12 | பார்வைகள் : 4062


இஸ்ரேல்-ஈரான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1 ஆம் திகதி இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதி உள்பட 12 பலியானார்கள்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனாலும் அதை வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தடுத்தது.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து தாக்குதலை நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியது.

மத்திய ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.

ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.மேலும் ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்தின. இஸ்ரேல் தாக்குதலையடுத்து ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு உள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

முக்கிய நகரங்களான இஸ்பஹான், ஷிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் ஆகியவற்றில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் தாக்கு தலையடுத்து பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் வான்வழித்தாக்குதலுக்காக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் உஷார் படுத்தப்பட்டனர்.

ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்பஹானில் ஒரு பெரிய ராணுவ விமான தளம், யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப்பகுதியான நடான்ஸ் நகரம் உள்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் உள்ளன.

இதற்கிடையே இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்பஹானில் மூன்று டிரோன்கள் வாகனத்தில் காணப்பட்டதாகவும், அவற்றை நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரித்திருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்