சென்னையில் ஓட்டுப்பதிவில் சுணக்கம் ஏன்: ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 சித்திரை 2024 சனி 11:08 | பார்வைகள் : 1618
சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ( ஏப்.,19) நடந்த லோக்சபா தேர்தலில் சென்னையில் குறைந்த அளவு ஓட்டு பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஓட்டுப் போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் அதிகமான ஓட்டுப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்து இருந்தால், இந்த ஓட்டுப்பதிவு சதவீதமும் வந்து இருக்காது. வெயிலின் காரணமாக பகலுக்குப் பிறகு வாக்காளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதேபோல், அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பலரும் ஓட்டுப் போட வருவதற்கான முயற்சிகளை எடுக்க தயங்குகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிகளவு ஓட்டுப்பதிவை மேற்கொள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் மூலமாக நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டோம். தொடர் விழிப்புணர்வு மூலம் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.