இந்தியாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கை ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடம்: நிர்மலா சீதாராமன்
20 சித்திரை 2024 சனி 11:10 | பார்வைகள் : 1726
2014க்கு பிறகு இந்திய பொருளாதாரத்தை மறுசீரமைத்தது மற்றும் வங்கிகளை கட்டமைத்தது ஆகியன ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
குஜராத் வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: 2014 முதல் தற்போது வரை இந்தியா தனது பொருளாதாரத்தை மறுசீரமைத்து உள்ளது. குறிப்பாக வங்கிகள் புத்துயிர் பெற்றுள்ளன. இது உண்மையில் ஹார்வர்டு பல்கலைக்கு ஒரு பாடமாக இருக்கும். 2014க்கு முன்னர், வங்கிகள் வராக்கடன் காரணமாக தத்தளித்தன. இதனால், நிறுவனங்களுக்கு வங்கிகளால் கடன் வழங்க முடியவில்லை.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனது. ஆனால் இந்தியாவில் பல வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டு சீராக செயல்படுவதையும் , சவால்களை எதிர்கொள்வதையும் உறுதி செய்தோம்.
கோவிட்டிற்கு பிறகு, வங்கிகளை ஆரோக்கியமாக வைத்து இருப்பதுடன், திவால் ஆகாமல் வைத்து இருப்பது, மேற்கத்திய நாடுகளுக்கு சாதாரண விஷயமாக இருந்தாலும், நாங்கள் குழப்பமான சூழ்நிலையிலேயே அதனை துவங்கினோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.