ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ஸ்கோரை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
20 சித்திரை 2024 சனி 15:33 | பார்வைகள் : 1313
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினா். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத டிராவிஸ் ஹெட் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாணவேடிக்கை நடத்தினர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
2-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசியது.
3-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று பந்துகளை டிராவிஸ் ஹெட் பவுண்டரிக்கு விரட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 50 ரன்னைக் கடந்தது. 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கி 16 பந்தில் அரைசதம் அடித்தார் டிராவிஸ் ஹெட். 3-வது ஓவரில் 22 ரன்கள் கிடைக்க அந்த அணியின் ஸ்கோர் 62 ஆனது.
4-வது ஓவரை லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச 21 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச அணியின் ஸ்கோர் 100 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.
முகேஷ் குமார் வீசிய இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 22 ரன்கள் கிடைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக (ஐந்து ஓவர்களில்) சதம் அடித்த அணி என்ற சாதனையையும், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.