சூர்யா 44 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

21 சித்திரை 2024 ஞாயிறு 09:31 | பார்வைகள் : 4527
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் ரிலீஸ் ஆகும்.
கங்குவா படத்தில் நடித்து முடித்த கையோடு சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூர்யாவின் 44-வது படமான அதை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.
அதன்படி சூர்யா 44 திரைப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கமிட் ஆகி உள்ளாராம். இதன்மூலம் முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார் சந்தோஷ் நாராயணன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாம். இதுவும் சரித்திர கதையம்சம் கொண்ட அட்வெஞ்சர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பை கங்குவா பாணியில் பிரம்மாண்ட செட் அமைத்து நடத்த உள்ளார்களாம். இப்படத்தில் நடித்து முடித்த பின்னர் சுதா கொங்கரா இயக்கும் படம், வெற்றிமாறனின் வாடிவாசல் போன்ற படங்களில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.