பா.ஜ., 350 இடங்களில் வெல்லும்: பொருளாதார நிபுணர்
22 சித்திரை 2024 திங்கள் 01:00 | பார்வைகள் : 1426
இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., 330 முதல் 350 இடங்களில் தனித்து வெற்றி பெறும்'' என, பொருளாதார நிபுணரும், தேர்தலில் மக்கள் ஓட்டளிக்கும் முறை குறித்து கடந்த 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் நிபுணருமான சுர்ஜித் பல்லா தெரிவித்தார்.
பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா எழுதிய, 'ஹவ் வீ வோட்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக, 'செபாலஜிஸ்ட்' எனப்படும், மக்கள் ஓட்டளிக்கும் முறை குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் கூறியதாவது: புள்ளிவிபர சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், பா.ஜ., 330 முதல் 350 இடங்களில் தனித்து வெற்றி பெறும். கடந்த 2019ல் பெற்றதை விட, 5 முதல் 7 சதவீதம் அதிக இடங்களை பா.ஜ., கைப்பற்ற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பா.ஜ., ஐந்து இடங்களை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் கட்சி, 44 இடங்களில் வெற்றி பெறும். கடந்த 2014ல் பெற்றதை விட, 2 சதவீதம் குறைவான இடங்களையே காங்., பெறும்.
சரியான தலைமை இல்லாததே எதிர்க்கட்சி கூட்டணியின் மிகப் பெரிய பலவீனமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பொருளாதாரம் காரணமாக உள்ளது. இவை இரண்டுமே பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளன.
பிரதமர் மோடிக்கு இணையாக 50 சதவீதம் பிரபலமான தலைவரை தேர்ந்தெடுத்து இருந்தால் கூட, அது எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்து இருக்கும். களத்தில் கடுமையான போட்டியை அவர்களால் கொடுத்திருக்க முடியும்.
ஜாதி, மதம் உள்ளிட்ட காரணிகளை தாண்டி, மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அடிப்படையாக வைத்தே அவர்கள் ஓட்டளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.