ரூ 4 கோடி பிடிபட்ட விவகாரம்: அமலாக்க துறைக்கு உத்தரவு
23 சித்திரை 2024 செவ்வாய் 00:55 | பார்வைகள் : 1595
சென்னை தாம்பரத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு மனு
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் அலுவலகத்தில் வைத்திருந்த 28.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் பறிமுதல் குறித்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ராகவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பணம் பறிமுதல் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது. இருந்தாலும், அமலாக்கத் துறையின் விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன்' என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு நாளைக்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.