டிக்டொக் நிறுவனத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை
23 சித்திரை 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 2240
சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது.
குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காணொளிகளை பார்ப்பதற்காக பயனர்களுக்கு பணம் செலுத்தும் புதிய செயலி குறித்த மேலதிக தகவல்களை வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
டிக்டொக் செயலியை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
பாதுகாப்பு காரணிகள் காரணமாக குறித்த தடையை, இந்தியா அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீனாவைச் சேர்ந்த அதிக பிரபலமான டிக்டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த சனிக்கிழமை (2024.04.20)இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.
இதன்படி டிக்டொக் சீன தாய் நிறுவனமான பைடான்ஸை மாற்றிக்கொள்ளாவிட்டால் அமெரிக்க சந்தையில் தடைக்கு உள்ளாகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.