கட்சி சார்பின்றி செயல்படாத தேர்தல் கமிஷன்: பினராயி
24 சித்திரை 2024 புதன் 00:46 | பார்வைகள் : 1116
கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டிய தேர்தல் கமிஷன், மவுனமாக இருப்பது துரதிஷ்டவசமானது,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், 'காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு வாரி வழங்கி விடும்' என்றார்.
இந்தப் பேச்சுக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் கமிஷனிலும் புகார் அளித்தன.இந்த விவகாரம் குறித்து, கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மவுனம் காத்து வருகிறது. இது துரதிஷ்டவசமானது. கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டிய தேர்தல் கமிஷன் மவுனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.