இலங்கையை விட்டு வெளியேறிய 25 லட்சம் பேர்
24 சித்திரை 2024 புதன் 04:33 | பார்வைகள் : 2191
கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 2,565,365 இலங்கையர்கள் பல்வேறு காரணங்கள் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கைகள் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 இல் 1,127,758 இலங்கையர்களும், 2023 இல் 1,437,607 இலங்கையர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மொத்த புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் 24 வீதமானோர் மாத்திரம் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.
இதன்படி, 2022 ஆம் ஆண்டில் 311,269 பேரும் 2023 ஆம் ஆண்டில் 297,656 பேரும் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 70 வீதமானோர் திறமையான மற்றும் தொழில்முறை பணியாளர்களாக இருப்பார்கள் என்று புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள காலாண்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2022ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவு 3,789.4 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பணியாளர்கள் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
இதன்படி, குறித்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலாவணியின் அளவு 9,759 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.