இஸ்ரேல் நாட்டை கடுமையாக எச்சரிக்கும் ஈரான்...
24 சித்திரை 2024 புதன் 05:30 | பார்வைகள் : 2348
பாகிஸ்தானில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, பல்கலைக்கழகம் ஒன்றில் உரை நிகழ்த்தியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், இஸ்ரேல் மீண்டும் தவறு செய்து ஈரானின் புனித மண்ணைத் தாக்கினால், நிலைமை வேறுவிதமாக இருக்கும், இஸ்ரேலில் எதுமே மிஞ்சாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 13 ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீரென்று நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணையால் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் முதல் நேரடியான தாக்குதல் இதுவென்றே கூறப்பட்டது.
சிரியாவில் அமைந்துள்ள ஈரானின் துணைத் தூதரகம் மீதான கொடூரத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலேயே தொடர்புடைய டஹக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என்றே ஈரான் நம்புகிறது.
அத்துடன் இஸ்ரேல் தரப்பில் இதற்கு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஈரான் தரப்பில் தங்களின் தாக்குதல் இலக்கை எட்டியதாக கூறிவரும் நிலையில், லேசான பாதிப்பு மட்டுந்தான் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய ஈரானில் உள்ள ராணுவ விமான தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்தது. ஆனால் அதை மட்டந்தட்டியுள்ள ஈரான், பொம்மை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளதாக கிண்டல் செய்தது.
ஆனால் பாகிஸ்தானில் செவ்வாய்கிழமை ஆற்றிய உரையின் போது இஸ்ரேலிய தாக்குதல் குறித்து கருத்து தெரிவிப்பதை ரைசி தவிர்த்துள்ளார்.
முன்னதாக ஞாயிறன்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி, மூத்த ராணுவ தளபதிகளை சந்தித்து, இஸ்ரேல் மீதான தாக்குதலை பாராட்டியுள்ளார்.
அவரும் இஸ்ரேலின் பதிலடியை குறிப்பிட மறுத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.