கடலை மிட்டாய்
27 சித்திரை 2024 சனி 10:59 | பார்வைகள் : 870
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கடைகளில் கிடைக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று கடலை மிட்டாய். ஏன் இதை பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். வெறும் வேர்க்கடலை மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கடலை மிட்டாய் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எனவே இந்த கடலை மிட்டாயை சுவையாக வீட்டிலேயே எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இந்த ரெசிபி பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். வேண்டுமென்றால் இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ்களையும் சேர்த்து செய்து குழந்தைகளுக்கு தரலாம்.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 1/2 கிலோ
வெல்லம் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
தற்போது வறுத்த வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸில் வைத்து ஒன்று இரண்டாக அடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து வெல்ல பாகு செய்ய தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் பாகு ஆகும் வரை சமைக்கவும்.
குறிப்பு : வெல்லம் பாகு ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துளி பாகை விடவும். பாகு உருண்டை வடிவில் தண்ணீரில் மிதந்தால் பாகு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
பாகு தயாரானதும் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிண்டி அதை மற்றொரு பாத்திரத்தில் மற்றி கொள்ளவும்.
பிறகு உங்கள் இரண்டு கைகளிலும் நெய்யை தடவி உருண்டை அல்லது தட்டை என எந்த வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் கடலை மிட்டாயை தயாரித்து கொள்ளவும்.
பின்னர் தயாரித்த கடலை மிட்டாயை சுமார் அரை மணி நேரம் காயவைக்கவும்.
அவ்வளவு தான் வீட்டில் செய்த சுவையான கடலை மிட்டாய் சாப்பிட ரெடி. இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் ருசித்து சாப்பிடுவார்கள்.