Paristamil Navigation Paristamil advert login

கோவை தொகுதி மக்களை விலைக்கு வாங்க முயற்சி அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தொகுதி மக்களை விலைக்கு வாங்க முயற்சி அண்ணாமலை குற்றச்சாட்டு

27 பங்குனி 2024 புதன் 00:56 | பார்வைகள் : 2393


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பா.ஜ., கூட்டணி சட்டசபை தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:

இந்திய அரசியல் வரலாற்றில், இது முக்கியமான தேர்தல். இந்தியா முன்னேறக்கூடாது என்று நினைப்பவர்கள் ஓரணியில் உள்ளனர். 2024ல் மோடி தான் பிரதமராவார் என்பது, தேர்தலுக்கு முன்னரே தெரிந்து விட்டது. தமிழகத்தில் வேலை செய்தாக வேண்டிய கட்டாயம், பா.ஜ.,வுக்கு உள்ளது.

ஆனைமலையாறு - -நல்லாறு திட்டம் என்பது, மிகவும் சிரமமான திட்டம் தான் என்றாலும், இது குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற யாரால் முடியும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வளர்ந்து வரும் கோவை நகரில், குடிநீர், 15 நாளுக்கு ஒரு முறை தான் வருகிறது. நீர்ப்பாசனம் என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தையாக உள்ளது. கம்யூ., கட்சியை போல, காரணம் கூறி தப்பிக்க நான் விரும்பவில்லை.

எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என்பதால் தான், '400 எம்.பி.,க்கள் வேண்டும்' என, மோடி கேட்கிறார். இந்தியா, ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் முடிந்ததும், ஜவுளி தொழில் இரட்டிப்பு வளர்ச்சி பெறும்.

காமராஜர் ஆட்சிக்குப் பின் தமிழகத்தின் பாசன வசதி, 14 சதவீதம் குறைந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 700 நாட்களே உள்ளன. 'மூன்றாவது முறை ஆட்சியில் அமர்ந்தவுடன் எடுக்கப் போகும் முடிவுகளை இந்த நாடே உற்று நோக்கும்' என்று, பிரதமர் மோடி கூறியுள்ளார்.தொழில் வளர்ச்சி, வாகன பெருக்கம், உயிர்ப்பலி ஆகியவற்றை கருதி, அடுத்த ஐந்து ஆண்டுக்குள், கரூர் - -கோவை பசுமை வழிச் சாலை கட்டாயம் கொண்டு வரப்படும். கோவை எம்.பி.,யை எத்தனை பேர் பார்த்து உள்ளீர்கள்?

கோவை மக்களை விலைக்கு வாங்க, தி.மு.க.,வின் டி.ஆர்.பி., ராஜா பணத்தோடு நிற்கிறார்; இதை முறியடிக்க வேண்டும். அரசியலில் விடுமுறை என்று நான் எடுத்ததில்லை. என் தாயைப் பார்த்து இரண்டு மாதமாகிறது. காரணம், இப்போது மாற்றமில்லை எனில், இனி, எப்போதும் நடக்காது.

மக்களின் கோரிக்கை மனுக்களை தட்டிக் கழித்தால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை விட மாட்டேன். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது எங்கள் பொறுப்பு. கெட்டவர்கள் அரசியலுக்கு வராமல் இருக்க, நல்லவர்கள் பேச ஆரம்பிக்க வேண்டும். தென்னை வளர்ச்சிக்காக பொள்ளாச்சியில் பிரத்யேக தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்படும். தேவையற்ற சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

விசைத்தறிகளை தரம் உயர்த்த தேவையான கடன் வசதிகளை வழங்கி, நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற நெசவாளர்களின் கோரிக்கையை, பல்லடம் சட்டசபை தொகுதி தேர்தல் வாக்குறுதியாக உத்தரவாதம் அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கரூருக்கு வருகிறார் பிரதமர் மோடி

கரூரில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதன்பின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தமிழகத்திற்கு மீண்டும் பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வருவார். ஏப்., 2க்கு பின் எங்கு வருகிறார் என்பது குறித்து பின் அறிவிக்கப்படும். 

கரூர் மாவட்டத்தில், கிராமப்புறத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அழைத்து வர வேண்டும் என்பது மிகவும் ஆவலாக உள்ளது. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்