உலகக் கோப்ப போட்டி - இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய திட்டம்
11 ஆவணி 2023 வெள்ளி 10:29 | பார்வைகள் : 3793
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் புதியதாக வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியின் வீரர்களும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி பழகிவிட்டனர்.
இதனை ஒருநாள் போட்டிகளில் 350 ஓட்டங்களையும் எளிதாக அணிகள் சேஸ் செய்வதை வைத்து நாம் காணலாம்.
இதற்கு சாதகமாகவே இந்திய ஆடுகளங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான இந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருப்பதால் சிக்ஸர் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தற்போதைய இந்திய அணியில் நடு வரிசை வீரர்கள் தடுமாறி வருவது கவலைக்குரியதாக உள்ளது.
இது ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வேகப்பந்துவீச்சும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு சொந்த மண்ணில் எப்போதும் கைகொடுக்கும் அம்சமாகும்.
இதற்கு ஏற்றார் போல் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் சுழற்பந்து வீச்சு வலுவாக இல்லை.
இதன் காரணமாக உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி நிர்வாகம் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரித்துக் கொடுக்குமாறு இந்திய அணி நிர்வாகம் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் அவுஸ்திரேலியாவுடனும், தர்மசாலாவில் நியூஸிலாந்துடனும், கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுடனும், லக்னோவில் இங்கிலாந்துடனும் இந்திய அணி விளையாடுகிறது.