முட்டை பணியார தொக்கு
28 பங்குனி 2024 வியாழன் 09:40 | பார்வைகள் : 1691
பெரும்பாலான வீடுகளில் முட்டையை வைத்து பொரியல், ஆம்லெட், வறுவல், குழம்பு மற்றும் தொக்கு என விதவிதமாக செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது வழக்கமான தொக்கு போல் அல்லாமல் புதுவிதமான முறையில் சுவையான முட்டை பணியார தொக்கு எப்படி செய்யலாம் என்று தான்.
தேவையான பொருட்கள் :
முட்டை பணியாரம் செய்ய தேவையானவை :
விளம்பரம்
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1 தேவைக்கேற்ப
தொக்கு செய்ய தேவையானவை :
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வீட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பணியார கல் ஒன்றை வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டையை பணியார கல்லில் ஊற்றி கொள்ளவும்.
ஒருபுறம் வெந்ததும் முட்டையை திருப்பி போட்டு மறுபுறமும் நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.
முட்டை இருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
இதன் பச்சை வாசனை போனவுடன் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் அதில் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை பணியாரத்தை போட்டு கிளறிக்கொள்ளுங்கள்.
தற்போது கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
பத்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் மசாலாக்கள் எல்லாம் முட்டை பணியாரத்தின் உள்ளே இறங்கி இருக்கும்.
பின்னர் அதை சில நிமிடங்கள் வதக்கி இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி கலந்து இறக்கினால் சுவையான முட்டை பணியார தொக்கு சூடாக பரிமாற தயாராக இருக்கும்.