Essonne : தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த சிறுவன் உள்ளிட்ட நால்வர் கைது!
29 பங்குனி 2024 வெள்ளி 13:09 | பார்வைகள் : 5366
Essonne மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Verrières-le-Buisson, Massy போன்ற Essonne மாவட்டத்தின் வடக்கு நகரங்களில் இந்த நால்வர் கொண்ட குழு கடந்த வாரங்களில் ஆயுதங்கள் மூலம் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறியில் ஈடுபட்டிருந்தார்கள். அதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதில், அக்குழுவுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இருந்து இடம்பெறும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, குறித்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அனைவரும் பதின்ம வயதுடையவர்கள் எனவும், அவர்களில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, கத்தி ஒன்றை உருவி, காவல்துறையினரை அச்சுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்களிடம் இருந்து ஏராளமான தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், ஆடம்பர ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மார்ச் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இக்கைது சம்பவம் Massy நகரில் இடம்பெற்றது.